Published : 17 Mar 2014 12:00 AM
Last Updated : 17 Mar 2014 12:00 AM

தருமபுரியில் அதிமுக டெபாசிட் இழக்க வேண்டும்: ராமதாஸ்

தருமபுரி நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளராக அன்புமணியை அறிமுகப்படுத்திய பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அதிமுக-வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும் என்று கூறினார்.

தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகே நேற்று இரவு பாமக தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், தருமபுரி நாடாளு மன்றத் தொகுதி பாமக வேட் பாளராக அன்புமணியை அறிமுகப்படுத்தினார் டாக்டர் ராமதாஸ். பின்னர் அவர் பேசியது:

பென்னாகரம் இடைத் தேர்தலில் அதிமுக-வை டெபாசிட் இழக்கச் செய்ததுபோல், வரும் நாடாளுமன்றத் தேர்தலிலும் தருமபுரி தொகுதியில் அதிமுக-வை டெபாசிட் இழக்கச் செய்ய வேண்டும். இந்தத் தொகுதியில் போட்டியிடும் அன்புமணிக்கு 8 லட்சம் வாக்குகள் வழங்குமாறு மக்களைக் கேட்டுக் கொள்கிறேன், என்றார்.

பாமக வேட்பாளராக அறிமுகப் படுத்தப்பட்ட அன்புமணி பேசுகை யில், சுகாதாரம், கல்வி, பொரு ளாதாரத்தில் தமிழகத்திலேயே தருமபுரி மாவட்டம் மிகவும் பின் தங்கியுள்ளது. தருமபுரி தொகுதி மக்களின் குரல் டெல்லியில் ஒலிக்க வேண்டுமெனில், என்னை அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்யுங்கள். நான் வெற்றி பெற்றால் தருமபுரி மாவட்டத்தை, தமிழ்நாட்டின் சிறந்து 5 மாவட்டங்களில் ஒன்றாக உயர்த்திக் காட்டுகிறேன், என்றார்.

சேலம், கள்ளக்குறிச்சி வேட்பாளர்கள்

தமிழகத்தில் பாஜக கூட்டணி யில் தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் இடம் பெற்றுள்ளன. சேலம், கள்ளக்குறிச்சி நாடாளு மன்றத் தொகுதிகள் தேமுதிக-வுக்கு ஒதுக்கப்படும் என்ற சூழலில், ஏற்கெனவே சேலம் தொகுதி பாமக வேட்பாளராக அறிவிக்கப்பட்ட, பாமக இளைஞரணி மாநில நிர்வாகி ஆர்.அருள், கள்ளக்குறிச்சி வேட்பாளர் ஆத்தூர் சண்முகம் ஆகியோரை மேடையில் நிற்க வைத்த டாக்டர் ராமதாஸ், இருவரும் எதையும் நினைத்து கலங்காமல், தேர்தல் பணிகளைத் தொடருங்கள். உங்களுக்கு வெற்றி காத்திருக்கிறது என்றார். இந்த அறிவிப்பு கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x