Published : 01 Aug 2021 06:40 PM
Last Updated : 01 Aug 2021 06:40 PM
மதுரையில் அதிகபட்ச மின்கட்டணமாக ரூ.850 செலுத்திய வாடகை வீட்டுக்காரர் ஒருவருக்கு ஜூலை மாதத்திற்கான மின் கட்டணமாக ரூ.11,352 செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
மதுரை தெப்பக்குளம் தமிழன் தெருவைச் சேர்ந்தவர் ரியாஸ் (41). கல்வி ஆலோசகரான அவர் தமிழன் தெருவில் ஒன்றரை ஆண்டாக வாடகை வீட்டில் மனைவி, 2 மகன்களுடன் வசித்து வருகிறார்.
வாடகை வீட்டிற்கு ஒன்றரை ஆண்டாக 2 மாதத்திற்கொருமுறை ரூ.400-ல் இருந்து ரூ.850-க்குள் கட்டணமாக செலுத்தியுள்ளார். இவருக்கு தற்போது ஜூலை மாதத்திற்குரிய கட்டணமாக ரூ.11,352 கட்டணத்தோடு ரூ.390 டெபாசிட் செலுத்துமாறு அறிவிப்பு வந்துள்ளதில் அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதுகுறித்து ரியாஸ் கூறும்போது, ''உயர் கல்வி கற்க நினைக்கும் ஏழை, எளிய மாணவர்களுக்கு இலவசமாக ஆலோசனை வழங்கி வருகிறேன். எனக்கு மாத வருமானம் ரூ.25 ஆயிரத்திற்குள்தான் வரும். கரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ளோம்.
கடந்த மார்ச் மாதத்தில் ரூ.680 கட்டணம் செலுத்தினேன். மே மாதத்திற்கு ரூ.260 பணம் செலுத்தினேன். தற்போது ஜூலை மாதத்திற்கு ரூ.11,352 கட்டணத்தோடு, டெபாசிட் தொகை ரூ.390 செலுத்த வேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது.
இதுகுறித்துத் தெப்பக்குளம் துணை மின் நிலையம் சென்று மின்வாரிய அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் சரியான பதில் தர மறுக்கின்றனர். மீட்டரில் உள்ளவாறு பணத்தைக் கட்டச் சொல்கின்றனர். இதுவரை அதிகபட்சமாக ரூ.850க்கும் மேல் கட்டியதில்லை. திடீரென ரூ.11,352 கட்டணம் என்பதால் அதிர்ச்சியாக இருக்கிறது.
இதுகுறித்து மின்வாரிய உயரதிகாரிகளுக்கு ஆன்லைனில் புகார் தெரிவித்து 4 நாட்களாகியும் நடவடிக்கை இல்லை. இதுகுறித்துத் தமிழக அரசின் மின்னகத்திற்கும், மின்சாரத்துறை அமைச்சர், தமிழக முதல்வர் ஆகியோருக்கும் புகார் அனுப்பியுள்ளேன். மின் மீட்டரில் தவறா, கணக்கீட்டில் தவறா எனத் தெரியவில்லை. இதற்கு ஒரு தீர்வு வேண்டும்'' என்று ரியாஸ் தெரிவித்தார்.
இதுகுறித்துத் தெப்பக்குளம் மின்நிலைய உதவிப் பொறியாளர் வடிவேல்குமார் கூறுகையில், ''கரோனா காலத்தில் மின் கணக்கீட்டில் சில தொழில்நுட்பக் கோளாறுகள் நடந்துள்ளன. எங்கே தவறு நடந்தது எனக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும். மின் மீட்டரில் குறைபாடு இருந்தாலும் சரி செய்துதரப்படும்'' என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT