Published : 01 Aug 2021 05:00 PM
Last Updated : 01 Aug 2021 05:00 PM
திருவண்ணாமலையில் இன்று தொடங்கி வைக்கப்பட்ட கரோனா தடுப்பு விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்றாமல் ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு அரசு அதிகாரிகள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் கரோனா தொற்றுப் பரவல் தடுப்புக்கான ஒரு வார விழிப்புணர்வுப் பிரச்சாரம் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில் ராஜகோபுரம் முன்பு இன்று (1-ம் தேதி) தொடங்கியது. ஆட்சியர் பா.முருகேஷ் தலைமை வகித்துத் தொடங்கி வைத்து உறுதிமொழி ஏற்றார். பின்னர் அவர், விழிப்புணர்வுப் பிரச்சார வாகனத்தின் செயல்பாடுகளைப் பார்வையிட்டு, பொதுமக்களுக்குத் துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தார். கலைக்குழுவினர் மூலம் வீதி வீதியாக விழிப்புணர்வுப் பிரச்சாரம் நடைபெற்றது.
முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைக் கடைப்பிடித்தல், அடிக்கடி கைகளைச் சுத்தம் செய்தல் மற்றும் தடுப்பூசி செலுத்திக் கொள்ளுதல் ஆகியவற்றை வலியுறுத்தி ஒரு வாரத்துக்கு விழிப்புணர்வுப் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. ஆனால், திருவண்ணாமலையில் தொடங்கி வைக்கப்பட்ட விழிப்புணர்வுப் பிரச்சாரத்தில், சமூக இடைவெளி காற்றில் பறந்தது.
சுகாதாரத் துறை அறிவித்துள்ள சமூக இடைவெளியைப் பொதுமக்கள் பின்பற்றாமல் இருக்கும் நிலையில், முன் உதாரணமாக இருக்க வேண்டிய அரசுத் துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஆகியோர் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காமல் அலட்சியமாகப் பங்கேற்றனர். ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு, காற்று கூட புகுந்து விட முடியாத அளவுக்கு நெருக்கமாக நின்றிருந்தனர். அதேபோல், விழாவில் பார்வையாளர்களாகப் பங்கேற்ற பொதுமக்களும், ஒருவரையொருவர் இடித்துக் கொண்டு வேடிக்கை பார்த்தனர்.
விழிப்புணர்வுப் பிரச்சாரமே, தொற்றுப் பரவலுக்கு அடிகோலிட்டுவிட்டது. இந்த நிலை தொடர்ந்தால், 3-வது அலையின் தாக்குதலை விரைவில் எதிர்கொள்ள நேரிடும் என நோய்த் தடுப்பு விதிகளைப் பின்பற்றும் மக்கள் கூறுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT