Published : 01 Aug 2021 03:28 PM
Last Updated : 01 Aug 2021 03:28 PM
கரோனா பரவல் அதிகரிப்பதைத் தடுக்க, கோவை மாவட்டத்துக்கு நாளை (ஆக.2) முதல் கூடுதல் கட்டுப்பாடுகளை அமல்படுத்த மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க, நேற்று (31-ம் தேதி) முதல் வரும் 9-ம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அமல்படுத்தி தமிழகஅரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்த, மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்குத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கோவையில் குறைந்திருந்த கரோனா தொற்றுப் பரவல், கடந்த சில நாட்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சிறிது சிறிதாக உயர்ந்து வருகிறது.
இந்நிலையில் கரோனா பரவல் தடுப்பு மற்றும் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைக் கடுமையாக நடைமுறைப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் இன்று (ஆக 1) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தலைமை வகித்தார். இக்கூட்டத்தில் காவல் ஆணையர், பல்வேறு வர்த்தக சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட முடிவுகள், விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
''தமிழக அரசால் முன்னரே விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளுடன், கோவை மாவட்டத்துக்கு 2-ம் தேதி (நாளை) முதல் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. அதன்படி, கோவை மாவட்டத்தில் உள்ள அத்தியவாசியக் கடைகளான பால், மருந்தகம், காய்கறிக் கடைகள் தவிர மற்ற கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும்.
மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட கிராஸ்கட் சாலை, 100 அடி சாலை, காந்திபுரம் 5, 6, 7-வது தெருக்கள், ஒப்பணக்கார வீதி, ராமமூர்த்தி சாலை, சாரமேடு சாலை, ரைஸ் மில் சாலை, என்.பி.இட்டேரி சாலை, எல்லைத் தோட்ட சந்திப்பு, துடியலூர் சந்திப்பு ஆகிய தெருக்களில் இயங்கும் அத்தியாவசியக் கடைகளான பால், மருந்தகம், காய்கறிக் கடைகள் தவிர, மற்ற கடைகள் அனைத்தும் ஞாயிற்றுக்கிழமைகளில் இயங்கத் தடை விதிக்கப்படுகிறது.
மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவகங்களும் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை அமர்ந்து 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் இயங்க அனுமதிக்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை பார்சல் சேவைக்கு மட்டும் அனுமதி அளிக்கப்படுகிறது. மாவட்டத்தில் உள்ள அனைத்து மார்க்கெட்டுகளில் மொத்த விற்பனை நிலையங்களுக்கு மட்டும் அனுமதிக்கப்படுகிறது. சில்லரை விற்பனைக்கு அனுமதியில்லை. 50 சதவீதக் கடைகள் சுழற்சி முறையில் இயங்க அனுமதிக்கப்படும். சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் இதை கண்காணிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை
தமிழ்நாடு- கேரளா மாநில எல்லைகளில் உள்ள அனைத்து சோதனைச்சாவடி வழியாக கோவை மாவட்டத்துக்குள் வரும் பயணிகள் அனைவரும் 72 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட கரோனா இன்மை சான்று அல்லது கரோனா தடுப்பூசி (2 தவணைகள்) செலுத்தப்பட்டதற்கான சான்று கண்டிப்பாக உடன் வைத்திருக்க வேண்டும். மேற்கண்ட சான்றுகள் இல்லையென்றால், சோதனைச் சாவடிகளிலேயே ரேண்டம் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை மேற்கொள்ளப்படும்''.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT