Last Updated : 15 Feb, 2016 02:44 PM

 

Published : 15 Feb 2016 02:44 PM
Last Updated : 15 Feb 2016 02:44 PM

குமரியில் ஒரு தொகுதியிலாவது பெண் வேட்பாளரை நிறுத்தக்கோரும் தமாகா மகளிரணி

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண்களுக்கு தொகுதி ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அக்கட்சியின் மகளிர ணியினர் வலியுறுத்தி வருகின்றனர். தேர்தலுக்கு ஆயத்தமாகும் வகையில் கடலோரப் பகுதிகளிலும், கிராமப்புறங்களிலும் கட்சிக்கு ஆள்சேர்க்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்திலேயே கன்னியாகுமரி மாவட்டத்தில்தான் காங்கிரஸ் மற்றும் பாஜகவுக்கு வாக்கு வங்கிகள் அதிகமாக உள்ளன. இங்கு கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் 3 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இரு இடங்களை அதிமுகவும், ஒரு தொகுதியை திமுகவும் கைப்பற்றின.

தற்போது காங்கிரஸைச் சேர்ந்த தொண்டர்கள் பலர் தமாகாவில் உள்ளனர். குமரியை பொறுத்தவரை மேற்கு மாவட்டம் முழுவதும், அதாவது கிள்ளியூர், விளவங்கோடு, பத்மநாபபுரம் பகுதிகளில் காங்கிரஸ், தமாகா தொண்டர்கள் பரவலாக உள்ளனர்.

மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் அசோகன் சாலமன் தலைமையில் அப்பகுதி காங்கிரஸார் தேர்தலுக்கான ஆயத்தப் பணியில் வேகம்காட்டி வருகின்றனர். அவர்களுக்கு போட்டியாக மேற்கு மாவட்ட தமாகாவினரும் களத்தில் இறங்கியுள்ளனர். அக்கட்சி மாவட்ட தலைவரான ஜான்ஜேக்கப் எம்.எல்.ஏ., மற்றும் அவரது ஆதரவாளர்கள் கிள்ளியூர் மற்றும் விளவங்கோடு தொகுதியை குறிவைத்து ஆரம்பகட்ட தேர்தல் பணியில் தற்போதே இறங்கியுள்ளனர். சமீபத்தில் விளவங்கோடு தொகுதிக்கு உட்பட்ட உண்ணாமலைகடையில் பிற கட்சிகளை சேர்ந்த இளைஞர்கள் தமாகாவில் இணைந்துள்ளனர்.

தமாகா மகளிரணி

குறிப்பாக தமாகா மாநில மகளிரணி துணைத் தலைவர் கிளாடிஸ் லில்லி, குமரி மாவட்டத்தில் கடலோரப் பகுதி மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பெண்களை தேர்தல் களத்தில் இறக்குவதற்கான ஆயத்தப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் மிடாலத்தை அடுத்த உதயமார்த்தாண்டம் பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத் தலைவிகளை தமாகாவில் இணைய செய்து அவர்களை தேர்தல் பணிக்கு தயார்படுத்தியுள்ளார்.

பெண் வேட்பாளர்

இதுகுறித்து கிளாடிஸ் லில்லி கூறும்போது, “குமரி மாவட்டத்தில் தமாகா சார்பில் ஒரு தொகுதியிலாவது பெண் வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்ற நம்பிக்கையுள்ளது. பெண்ணுக்கு தொகுதி ஒதுக்கீடு என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். காங்கிரஸுடன் இருந்தபோது அதிகமாக இருந்த பெண்களின் வாக்குகள், தற்போது எங்கள் வசம் உள்ளது. எனவே, சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்களுக்கு அங்கீகாரம் அளிக்கும் ஒரு தொகுதியில் நாங்கள் வெற்றிவாகை சூடுவோம்” என்றார்.

அதற்கேற்ப, சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க கன்னியாகுமரி வந்த தமாகா தலைவர் ஜிகே வாசன், பெண் வேட்பாளரை களமிறக்குவோம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

கட்சியின் கூட்டணி முடிவையொட்டி தான் தங்களின் கனவு நனவாகும் என்பதால், யாருடன் கூட்டணி என்பதை அறிய தமாகா மகளிரணியினர் காத்திருக்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x