Published : 12 Feb 2016 11:51 AM
Last Updated : 12 Feb 2016 11:51 AM
தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேரை சட்டப்பேரவையில் இருந்து இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது செல்லாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சட்டப்பேரவை நிறை வேற்றிய தீர்மானம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பிப்ரவரி 19-ம் தேதி நடந்த விவாதத்தின்போது, தேமுதிக எம்எல்ஏக்கள் அனை வரும் ஆளுங்கட்சிக்கு எதிராக கடுமையாக கோஷம் எழுப்பினர். எம்எல்ஏக்கள் சிலர் சபாநாயகரின் இருக்கையை நோக்கி கோஷம் எழுப்பியபடி சென்றனர். இச் சம்பவத்தையடுத்து சட்டப் பேரவையில் இருந்து தேமுதிக எம்எல்ஏக்கள் வெளியேற்றப் பட்டதுடன், 19 பேர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். இப்பிரச்சினை சட்டப்பேரவையின் உரிமைக் குழுவுக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விசா ரணையின் முடிவில், தேமுதிக எம்எல்ஏக்கள் 6 பேர் மீது நடவடிக்கை எடுக்க உரிமைக்குழு பரிந்துரை செய்தது.
சபாநாயகர் பதில்
இதன் அடிப்படையில், தேமுதிக எம்எல்ஏக்கள் வி.சி.சந்திரகுமார், ஆர்.மோகன்ராஜ், எஸ்.ஆர்.பார்த்திபன், எல்.வெங்கடேசன், சி.எச்.சேகர், கே.தினகரன் ஆகிய 6 பேர் சட்டப்பேரவையின் அப்போதைய தொடர் முழுக்க இடைநீக்கம் செய்யப்பட்டனர். இந்த காலகட்டத்தில் அவர்களது சம்பளம் மற்றும் இதர படிகளும் வழங்கப்பட மாட்டாது என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் 31-ம் தேதி நிறைவேற்றப்பட்ட இத்தீர் மானத்தை எதிர்த்து 6 எம்எல்ஏக்கள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
உச்ச நீதிமன்றம் சார்பில், தமிழக சட்டப்பேரவை சபாநாயகர் தனபால் மற்றும் செயலர் ஜமாலுதீன் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிடப்பட்டிருந்தது. அவர்கள் பதில் மனுவில், ‘தேமுதிக உறுப்பினர்கள் சட்டப்பேரவையில் விதிகளை மீறி நடந்து கொண்டதால், பேரவை விதிகளின்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு நடவடிக்கை எடுக்க சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டு. அதில் நீதிமன்றம் தலையிட முடியாது’ என்று கூறப்பட்டி ருந்தது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சலமேஸ்வர், ஏ.எம்.சாப்ரே ஆகியோர் நேற்று அளித்த தீர்ப்பில் கூறியிருப்பதாவது:
சட்டப்பேரவை நடவடிக்கை களை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் சபாநாயகருக்கு வழங்கப்பட்டிருந்தாலும் சபை விதிகள் பின்பற்றப்பட்டுள்ளதா என்பதை பரிசீலிக்கும் அதிகாரம் நீதிமன்றத்துக்கு உண்டு என்று பல்வேறு தீர்ப்புகளில் கூறப் பட்டுள்ளது. இந்த வழக்கைப் பொறுத்தமட்டில், சம்பவம் நடந்த தினத்தன்று எடுக்கப்பட்ட வீடியோ ஆதாரத்தின் அடிப்படை யில், உரிமைக்குழு நடவடிக்கை எடுக்க பரிந்துரை அளித்துள்ளது. உரிமைக்குழு சார்பில் உறுப்பி னர்களிடம் விளக்கம் கேட்டிருந் தாலும், தவறு செய்ததை முடிவு செய்வதற்கு அடிப்படையாக உள்ள வீடியோ ஆதாரத்தின் பிரதியை குற்றம்சாட்டப்பட்ட உறுப்பினர் களுக்கு வழங்கவில்லை. இது இயற்கை நீதியை மீறிய செயல்.
அடிப்படை உரிமை மீறல்
மேலும், சட்டப்பேரவை உறுப் பினருக்கு வழங்கப்படும் சம்பளம் மற்றும் படிகளை நிறுத்தி வைத்திருப்பதும் உறுப்பினரின் அடிப்படை உரிமையை மீறிய செயலாகும். அவர்களது அலுவ லகம் மற்றும் தங்கும் விடுதிகள் பறிக்கப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில், சட்டப்பேரவையில் பேசும் அவர் களது உரிமை பறிக்கப்பட்டுள்ளது. இந்த காரணங்களால் 31.3.2015-ல் 6 தேமுதிக எம்எல்ஏக்களை நீக்கி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் செல்லாது என்று முடிவெடுக் கப்பட்டு, ரத்து செய்யப்படுகிறது.
இவ்வாறு நீதிபதிகள் தங்கள் உத்தரவில் குறிப்பிட்டுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT