Published : 31 Jul 2021 05:15 PM
Last Updated : 31 Jul 2021 05:15 PM
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக அறிவித்துள்ள தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான் பாண்டியன், விசிக தலைவர் தொல்.திருமாவளவனைச் சந்தித்துள்ளார். கூடவே, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளார்.
தமிழக மக்கள் முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியன் தன்னுடைய மகனும், மருத்துவருமான வியங்கோ பாண்டியன் திருமணத்துக்கான அழைப்பிழைக் கொடுப்பதற்காக இன்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவனைச் சந்தித்தார்.
சென்னையில் உள்ள 'வெளிச்சம்' தொலைக்காட்சி அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. இருவரும் சுமார் அரை மணி நேரம் உரையாடினார்கள். அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்டதாக ஒரு வாரத்திற்கு முன்பு ஜான் பாண்டியன் அறிவித்திருந்த நிலையில், இந்தச் சந்திப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.
சந்திப்பின்போது உடனிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னியரசுவிடம் இதுபற்றிக் கேட்டபோது, "விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தொல்.திருமாவுக்கும், ஜான் பாண்டியனுக்கும் நெருங்கிய நட்பு இருந்தது. பிற்காலத்தில் எதிரெதிர் அரசியல் நிலைப்பாடுகளை எடுத்திருந்தாலும்கூட, பழைய நட்பு தொடரத்தான் செய்தது. இந்தச் சந்திப்பின்போது இவரும் தங்களது தனிப்பட்ட நட்பு, ஒன்றாக நடத்திய இயக்கங்கள், போராட்டங்கள் பற்றிப் பேசிக்கொண்டார்கள்.
விசிகவின் தேர்தல் வெற்றிக்கு வாழ்த்து சொன்ன ஜான் பாண்டியன், தனக்கு செல்வாக்குள்ள தென் மாவட்டத்தில் சீட் தராமல் வேண்டுமென்றே அதிமுக பழிவாங்கிவிட்டதாகவும் வருத்தப்பட்டார்.
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தை, ஆதிதிராவிடர் சமூகத்திடம் இருந்து பிரிக்க சூழ்ச்சி நடக்கிற இந்தக் காலகட்டத்தில் இந்தச் சந்திப்பை முக்கியமானதாகப் பார்க்கிறேன். அடுத்ததாக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்திக்க நேரம் கேட்டிருப்பதாகவும் ஜான் பாண்டியன் சொன்னார்.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிவிட்ட சூழலில், அவர் திருமாவையும், திமுக தலைவரையும் சந்திப்பது அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே நான் கருதுகிறேன்" என்று வன்னியரசு தெரிவித்தார்.
இதுகுறித்து ஜான் பாண்டியன் கட்சியினரிடம் கேட்டபோது, "முதல்வரைச் சந்திக்க அவர் நேரம் கேட்டிருப்பது உண்மைதான். மகனின் திருமணப் பத்திரிகையைக் கொடுப்பதுடன், தேவேந்திர குல வேளாளர்களுக்கான இட ஒதுக்கீடு, இந்த சமூகத்திலேயே கிறிஸ்தவர்களாக இருப்பவர்களுக்கு சாதிச் சான்றிதழ் கொடுப்பதில் உள்ள குளறுபடிளைத் தீர்ப்பது போன்ற கோரிக்கைகளையும் முன்வைக்க இருக்கிறார்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT