Published : 31 Jul 2021 01:19 PM
Last Updated : 31 Jul 2021 01:19 PM
கரோனா தொற்று குறைவதால் நோயே இல்லை எனப் பொதுமக்கள் நினைக்க வேண்டாம் என, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.
சென்னை, கலைவாணர் அரங்கத்தில் இன்று (ஜூலை 31) கரோனா விழிப்புணர்வு தொடர் பிரச்சாரம் மற்றும் குறும்படத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
இந்நிகழ்ச்சிக்குப் பின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்துப் பேசியதாவது:
"மூன்றாம் அலை குறித்துத் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்ல முடியாது. பொது சுகாதார வல்லுநர்களின் கருத்துகளின் அடிப்படையில்தான் கூறமுடியும். அதைத்தான் மத்திய, மாநில அரசுகளும் வலியுறுத்துகின்றன.
எந்தெந்தப் பகுதிகளில் தொற்று அதிகமாக இருக்கிறதோ, அங்கு என்ன வைரஸ் பரவுகிறது என்ற மரபியல் பரிசோதனை நடத்தப்படுகிறது. அதன் அடிப்படையில், ஏப்ரல், மே, ஜூன், ஜூலை ஆகிய மாதங்களில், சென்னையைப் பொறுத்தவரையில் சுமார் 90 விழுக்காடு டெல்டா எனப்படும், தற்போது உலகையே அச்சுறுத்தும் உருமாற்றம் அடைந்த வைரஸ் பாதிப்பு இருந்தது கண்டறியப்பட்டது.
மேலும், ஏற்கெனவே எவ்வளவு பேருக்குத் தொற்று ஏற்பட்டது, அவர்களுக்கு அதன்பின் எவ்வளவு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது எனப்படும் சீரோ ஆய்வும் நடத்தப்படுகிறது.
கேரளாவில் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், கூடுதலாக தடுப்பூசிகள் வழங்கப்படுகின்றன. அதுபோல, தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்கு ஏற்ப, மாவட்டங்களுக்குத் தடுப்பூசிகள் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
மருத்துவக் கட்டமைப்பு
தேவையான ஆக்சிஜன் படுக்கைகள், வென்டிலேட்டர்கள், சீரான ஆக்சிஜன் சப்ளை, ஆக்சிஜன் சேமிப்புக் கிடங்குகள் உள்ளிட்ட இதர வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 650 கே.எல்.ஆக்சிஜன் தேசிய அளவில் நமக்கு ஒதுக்கீடு செய்துள்ளனர். ஆனால், நமக்கு ஒரு நாளைக்கு 150 கே.எல்.தான் தேவைப்படுகிறது.
110 இடங்களில் ஆக்சிஜன் ஜெனரேட்டர்கள் நிறுவப்பட்டுள்ளன. மீதமுள்ள பகுதிகளிலும் விரைவில் நிறுவப்படும். இப்படி அனைத்து ஏற்பாடுகளும் செய்துவருகிறோம்.
அதிகாரபூர்வமாக இல்லாவிட்டாலும், மூன்றாவது அலை வந்தால் குழந்தைகள் அதிகமாகத் தாக்கப்படலாம் என எச்சரித்துள்ளனர். இதனால், முதல்வர் 25% படுக்கைகளைக் குழந்தைகளுக்கென உருவாக்கி, ஐசியு வசதியையும் ஏற்படுத்த அறிவுறுத்தியுள்ளார்.
ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தலைமையில், கட்டளை மையம் (டாஸ்க் ஃபோர்ஸ்) அமைக்கப்பட்டுள்ளது. தயவுசெய்து பொதுமக்கள் முகக்கவசம் அணிய வேண்டும். தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும். தொற்று குறைவதால், நோயே இல்லை என நினைக்காமல் கவனமுடன் இருக்க வேண்டும்.
90 விழுக்காட்டுக்கு மேல் நோயாளிகளை வீட்டுத் தனிமையில் வைக்கும்போது, சில சவால்கள் ஏற்படுகின்றன. மருத்துவ ரீதியான வழிகாட்டுதல்களுடன் முடிந்த அளவுக்கு கிராமப் பகுதியாக இருந்தாலும், கோவிட் கேர் சென்டர்கள் ஆரம்பிக்கப்பட்டு, அனுமதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்".
இவ்வாறு ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT