Published : 31 Jul 2021 11:39 AM
Last Updated : 31 Jul 2021 11:39 AM

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு: பிரதமருக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம்

ஓபிஎஸ் - பிரதமர் மோடி: கோப்புப்படம்

சென்னை

மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இந்தியா முழுவதுமுள்ள ஏறக்குறைய 40,000 எம்பிபிஎஸ் இடங்களில் அகில இந்திய ஒதுக்கீட்டுக்குத் தோராயமாக 6,000 இடங்கள் வழங்கப்படுகின்றன. இந்தத் தொகுப்பில் 2008-ம் ஆண்டு முதல் எஸ்.சி. மற்றும் எஸ்.டி. பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், இதில் ஓபிசி இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தப்படவில்லை.

இதனால், ஒவ்வொரு ஆண்டும் தமிழகத்திலிருந்து மட்டுமே இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவக் கல்வியில் ஒட்டுமொத்தமாக 685 இடங்களை ஓபிசி மாணவர்கள் இழக்கின்றனர். அகில இந்திய அளவில் கணக்கிட்டால் கிட்டத்தட்ட 5,000 ஓபிசி மாணவர்கள் தங்கள் வாய்ப்புகளை இழக்கிறார்கள்.

இதனால், அகில இந்திய ஒதுக்கீட்டில் ஓபிசி இட ஒதுக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என, தமிழகத்தில் அதிமுக, திமுக, பாமக, விசிக உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் வலியுறுத்திவந்தன.

இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் என, மத்திய அரசு சமீபத்தில் அறிவித்தது.

இதனைப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்றுள்ளனர். இதனை வரவேற்று, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று (ஜூலை 30) கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.

இந்நிலையில், மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கியதற்கு பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்து ஓபிஎஸ் கடிதம் எழுதியுள்ளார்.

இது தொடர்பாக, ஓபிஎஸ் இன்று (ஜூலை 31) எழுதிய கடிதத்தில், "தமிழக மக்களின் நீண்டகாலக் கோரிக்கையான, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீடு வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த முடிவுக்கு, நான் எனது மகிழ்ச்சியையும் நன்றியையும் தெரிவிக்க விரும்புகிறேன். அதனை இந்த ஆண்டிலேயே நடைமுறைப்படுத்த முடிவு செய்திருப்பது வரவேற்புக்குரியது.

ஆயிரக்கணக்கான ஓபிசி மாணவர்களுக்குப் பயனளிக்கும் இந்த முடிவு புரட்சிகரமான முடிவாகும். மேலும், இந்தியாவில் சமூக நீதியின் புதிய வடிவத்தை இது உருவாக்கும். இது பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன் மீதான உங்களின் அக்கறை மற்றும் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது" எனத் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x