Published : 31 Jul 2021 11:11 AM
Last Updated : 31 Jul 2021 11:11 AM
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் ரூ.33 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்று அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
திருப்புவனத்தில் நரிக்குடி சாலை விலக்கு அருகே, புதிதாக 7 வழித்தடங்களில் பேருந்துகளைத் தொடங்கி வைக்கும் விழா நேற்று (ஜூலை 30) மாலை நடைபெற்றது. இதற்காக சாலையோரத்தில் விழா மேடை அமைக்கப்பட்டதால், மாலை 4 மணியில் இருந்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதையடுத்து, வாகனங்கள் வேறு வழியில் மாற்றிவிடப்பட்டன. தொடர்ந்து நடந்த விழாவில், மாவட்ட ஆட்சியர் பி.மதுசூதன் ரெட்டி, தமிழரசி எம்எல்ஏ, கூட்டுறவு சங்கத் தலைவர் சேங்கைமாறன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விழாவில் அமைச்சர் ராஜகண்ணப்பன் பேசியதாவது:
"தமிழகத்தில் திறமையான முதல்வராக மு.க.ஸ்டாலின் கிடைத்துள்ளார். இனிவரும் காலங்களில் எதிர்க்கட்சிகளே இல்லாத அளவுக்கு சிறப்பாகச் செயல்பட்டு வருகிறார்.
அதிமுக ஆட்சியில் போக்குவரத்துத் துறையில் ரூ.33 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிமுக அரசு 5.76 லட்சம் கோடி கடன் வைத்துவிட்டுச் சென்றுள்ளனர். அதற்கு தற்போது வட்டி கட்டும் நிலை உள்ளது.
கடந்த 2 மாதங்களில் கூடுதலாக 3,000 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், 3,000 பேருந்துகள் அதிகரிக்கப்படும். பெண்களுக்குப் பேருந்தில் இலவசக் கட்டணத்தால் அரசுக்கு ரூ.1,358 கோடி செலவு ஏற்படுகிறது.
அதிமுகவைப் போன்று திமுகவில் அடிமை சாசனம் இல்லை. திமுகவின் தேர்தல் வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்".
இவ்வாறு அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
விழா முடிந்ததும் அமைச்சருக்குக் கட்சியினர் பொன்னாடை போர்த்த முற்பட்டபோது, கூட்டம் அதிகமானதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் மேடையில் இருந்த அதிகாரிகள் அதிருப்தி அடைந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT