Published : 30 Jul 2021 09:13 PM
Last Updated : 30 Jul 2021 09:13 PM
புதிய கல்விக்கொள்கை குறித்து பிரதமர் பேசிய கருத்துக்களில் உண்மை எதுவும் இல்லை என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் இன்று (ஜூலை 30) இரவு கூறியதாவது, ‘‘மத்திய அரசானது ஓர் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் மருத்துவ படிப்பில் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதம் இடஒதுக்கீடு வழங்குவதாக அறிவித்துள்ளது. இது வரலாறு காணாத முடிவாகும். இந்த முடிவை நாங்கள் வரவேற்கிறோம்.
இந்த முடிவை பல ஆண்டுகளாக மோடி தலைமையிலான மத்திய அரசு எடுக்காத காரணத்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தை சேர்ந்த பிள்ளைகளுக்கு மத்திய தொகுதிப்பில் இடம் கிடைக்காமல் அவதிப்பட்டு வந்தனர். அது இப்போது தீர்க்கப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின் பேரில், மத்திய அரசால் அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் இது நடைபெற்றிருக்கிறது.
பல போராட்டங்களுக்கு இடையில் தற்போது இந்த முடிவு வந்துள்ளது. இதனால் நாட்டிலுள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நிறைய பிள்ளைகளுக்கு இளநிலை, முதுநிலை மருத்துவம் படிப்பதற்கான வாய்ப்பு உருவாகும்.
இதற்கு ஒருபுறம் மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கும் அதே வேளையில், கடந்த காலங்களில் மத்திய அரசு இதனை மறுத்ததன் காரணமாக மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாமல் போனதை நினைவில் கொள்ள வேண்டும்.
இந்த கல்வியாண்டிலேயே அதனை மத்திய அரசு நடைமுறைப்படுத்த வேண்டும். இதனால் புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூதாயத்தைச் சேர்ந்த பிள்ளைகள் பலனடைவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன.
பிரதமர், முதல்வர்களுடன் பேசும்போது புதிய கல்விக் கொள்கை வளர்ச்சிக்கு வித்தாக அமையும், வேலை வாய்ப்புகளை உருவாக்கும், விஞ்ஞன உத்தியை கடைபிடிக்க சரியான முறையில் செயல்படும் என்று பேசியுள்ளார்.
பிரதமர் பேசிய இந்த கருத்துக்களில் உண்மை எதுவும் இல்லை. புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, எதிர்கட்சி தலைவராக இருந்தபோது, ஏகமனதாக நாம் நிறைவேற்றிய புதிய கல்விக்கொள்கையை மாநில அரசு ஏற்றுக்கொள்ளாது என்ற நிலையை இப்போது கூட்டணி வந்த காரணத்தால் மாற்றி பேசகிறார்.
ரங்கசாமி இந்தியை முதல் மொழியாக ஏற்றுக்கொள்கிறாரா? தமிழை விருப்பப்பாடமாக ஏற்றுக்கொள்கிறாரா? ஆங்கிலம் இணைப்பு மொழியாக இருக்க வேண்டாம் என்று சொல்கிறாரா? புதுச்சேரி மாநிலத்தில் இந்தியில் கோப்புகளை எழுதி அனுப்ப முடியுமா? பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழகத்தில் இந்தியை வைத்துக்கொண்டு மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர முடியுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதலில் ஒரு அரசுக்கு முதுகெலும்பு வேண்டும்.
மக்கள் ஏற்றுக்கொள்ளாத கொள்கைகளை, மத்தியில் ஆதரவான அரசு இருந்தாலும் கூட அதனை எதிர்க்க வேண்டும். மக்களின் உரிமைதான் முக்கியம்.
ஆனால், புதுச்சேரி மாநிலத்தில் உள்ள ரங்கசாமி அரசு மத்திய அரசுக்கு கைபாவையாக செயல்படுகிறது. இந்தி முதன்மை மொழி என்று வந்தால் நம்முடைய மாணவ, மாணவியர்கள் போட்டி போட்டுக்கொண்டு முன்னே வருவது சிரமமாக இருக்கும். அவர்களின் எதிர்காலம் கேள்வி குறியாகிவிடும். ஆகவே புதுச்சேரி மாநில அரசு, புதிய கல்விக்கொள்கையை மாநிலத்துக்கு ஏற்றார்போல் மாற்றியமைக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்த வேண்டும்.
காங்கிரஸ் ஆட்சி காலத்தில் விவசாயிகளின் பயிர் காப்பீடு திட்டத்தின் நூறு சதவீத தொகையை மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு கொடுத்தது. மோடி தலைமையிலான அரசு வந்தபிறகு அது 60 சதவீதமாக மாற்றப்பட்டது. மாநில அரசின் பங்கு 40 சதவீதமாக இருந்தது. ஆனால் தற்போது மத்திய அரசு அந்தத் திட்டத்தை மாற்றி, மத்திய அரசின் பங்கு 60 சதவீதமாக இருந்ததை 40 சதவீதமாக குறைத்திருக்கிறது.
இதனால் மாநில அரசுக்கு இழப்பு ஏற்படும். கரோனா தொற்று காலத்தில் எல்லா மாநிலங்களும் நிதி பற்றாக்குறையால் அவதிப்படும் இந்நேரத்தில் மத்திய அரசானது மாநிலங்களுக்கு கொடுக்க வேண்டிய நிதியை உயர்த்திக் கொடுக்க வேண்டும். அதனை குறைப்பதன் மூலம் மாநிலங்கள் நிதியை அதிகமாக கொடுப்பதற்கான வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்படும்.
இதனால் விவசாயிகளின் பயிர்காப்பீடு திட்டம் தடைபடும். புதுச்சேரி மாநிலத்தில் தொடர்ந்து 5 ஆண்டுகளாக நூறு சதவீதம் விவசாயிகள் பயிர் காப்பீடு திட்டத்தை சரியான முறையில் நிறைவேற்றினோம். இதனால் விவசாயிகளுக்கு நன்மை கிடைத்து. அந்த நிலை தொடர வேண்டுமென்றால் மத்திய அரசு தங்களின் கொடையாக இருக்கின்ற, 60 சதவீதத்தை தொடர வேண்டும். 40 சதவீதமாக குறைந்ததை மாற்றியமைக்க வேண்டும்.
அப்படி செய்தால்தான் விவசாயிகளுக்கு மாநில அரசுகள் அவர்களின் பயிர்களை காப்பீடு செய்து தேவையான நிவாரணத்தை வழங்க முடியும். பெகாசஸ் என்ற மென்பொள் மூலம் உலகில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட எண்கள் ஒட்டுக்கெட்கப்பட்டுள்ளது. இந்தியாவிலும் ராகுல் காந்தி, மம்தாபானர்ஜி உள்ளிட்டோரின் செல்போன்களும் ஒட்டு கேட்கப்பட்டுள்ளது.
யார் அதனை விலைக்கு வாங்கி, உலவு பார்த்திருக்கிறார்கள். ஆட்சி கவிழ்ப்புக்கு பயன்படுத்தி இருக்கிறார்கள் என்பதை விசாரணை செய்தால் உண்மை தெரியும். புதுச்சேரியில் கூட ஆட்சி கவிழ்ப்புக்கு எங்களின் செல்போன்கள் ஒட்டுக்கெட்கப்பட்டிருக்கலாம் என்று நான் கூறியிருந்தேன். இதுவும் அதிலிருந்து வெளிபடும்.
ஆகவே நரேந்திர மோடி அரசு அவர்கள் மீது குற்றம் இல்லை என்று சொன்னால் உடனடியாக விசாரணைக்கு தயாராக இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். உச்சநீதிமன்ற நீதிபதி மேற்பார்வையில் பகிரங்க விசாரணை நடத்த வேண்டும்.
இப்போது இந்தியாவில் கரோனா 3வது அலை வரும் என்ற நிலை உருவாகியுள்ளது. ஒவ்வோரு நாளும் 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். குறைந்து வந்த கரோனா தொற்று இப்போது அதிகரிக்கிறது.
எனவே 3வது அலையை தடுக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். புதுச்சேரியில் நூறு சதவீத தடுப்பூசியை செலுத்தினால் மட்டுமே கரோனா 3வது அலை வராமல் தடுக்க முடியும்.’’எனக் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT