Last Updated : 30 Jul, 2021 08:51 PM

6  

Published : 30 Jul 2021 08:51 PM
Last Updated : 30 Jul 2021 08:51 PM

கோவை ஆட்சியரிடம் மிரட்டும் தொனியில் நடந்துகொண்ட அதிமுக எம்எல்ஏக்கள்; தமிழக முதல்வர் நடவடிக்கை தேவை- வருவாய்த்துறை சங்கம் 

கோவை ஆட்சியரிடம் மிரட்டும் தொனியில் நடந்துகொண்ட அதிமுக எம்எல்ஏக்களுக்குக் கண்டனம் தெரிவிப்பதோடு, இனி இதுபோன்ற தவறான செயல்கள் நடக்காத வகையில் தமிழக முதல்வர் நடவடிக்கை தேவை என்று தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 8 அதிமுக எம்.எல்.ஏக்கள், எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தலைமையில் நேற்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்தனர். ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற எம்.எல்.ஏக்கள், அங்கிருந்த ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.

எம்.எல்.ஏக்கள் மனு அளித்தபோது இருக்கையில் அமர்ந்திருந்தவாறு, மனுவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வாங்கினார். இதற்குக் கண்டனம் தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர், எழுந்து நின்று மனுக்கள் வாங்க வேண்டும் என ஆட்சியரைச் சத்தம் போட்டனர். இதையடுத்து நிலைமையை உணர்ந்த ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எழுந்து நின்று எம்.எல்.ஏக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார்.

இந்நிலையில் இதுகுறித்து தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் கோவை மாவட்டச் செயலாளர் வெளியிட்ட அறிக்கையில், ‘‘எம்.எல்.ஏ எஸ்.பி.வேலுமணியின் தலைமையில் வந்த அதிமுக எம்.எல்.ஏக்கள் , ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை முற்றுகையிட்டும், மிரட்டும் தொனியில் பேச்சு மொழியையும், உடல் மொழியையும் பிரயோகித்தமைக்கும், ஆட்சியரின் கண்ணியத்தை களங்கப்படுத்தும் வகையில் நடந்து கொண்டதற்கும், கோவை மாவட்ட வருவாய்த்துறையின் சார்பில் கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம்.

இனி இதுபோன்ற தவறான செயல்கள் நடக்காத வகையிலும், அரசுப் பணியாளர்கள் அச்சுறுத்தலுக்கு ஆளாகாமல் நேர்மையாகச் சட்ட விதிகளின்படி பணியாற்றவும், அரசு மேற்கொள்ளும் மக்கள் நலத்திட்டங்களை எவ்விதத் தடையும் இன்றிச் செயலாற்றவும் தமிழக முதல்வர் தேவையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x