Last Updated : 30 Jul, 2021 08:18 PM

 

Published : 30 Jul 2021 08:18 PM
Last Updated : 30 Jul 2021 08:18 PM

மாவட்ட ஆட்சியரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை: காவல் ஆணையரிடம் திமுகவினர் புகார் 

கோவை

மனுக்கள் அளிக்க வந்தபோது, கோவை மாவட்ட ஆட்சியரை மிரட்டிய அதிமுக எம்எல்ஏக்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் காவல்துறையினரிடம் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிப் பகுதிகளில் தடுப்பூசி முகாம்களை அதிகரிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, 8 அதிமுக எம்.எல்.ஏக்கள், எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ தலைமையில் இன்று மாலை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்துக்கு வந்தனர். ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்ற எம்.எல்.ஏக்கள், அங்கிருந்த ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனிடம் கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை அளித்தனர்.

எம்.எல்.ஏக்கள் மனு அளித்தபோது இருக்கையில் அமர்ந்திருந்தவாறு, மனுவை ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் வாங்கினார். இதற்குக் கண்டனம் தெரிவித்த அதிமுக எம்.எல்.ஏக்கள் சிலர், எழுந்து நின்று மனுக்கள் வாங்க வேண்டும் என ஆட்சியரைச் சத்தம் போட்டனர். இதையடுத்து நிலைமையை உணர்ந்த ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் எழுந்து நின்று எம்எல்ஏக்களிடம் மனுக்களைப் பெற்றுக் கொண்டார். ஆட்சியரைக் கண்டித்த அதிமுக எம்.எல்.ஏக்களின் இந்த செயலுக்கு திமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாகக் கோவை மாநகர் கிழக்கு மாவட்டத் திமுக பொறுப்பாளர் நா.கார்த்திக் 'இந்து தமிழ் திசை' செய்தியாளரிடம் கூறும்போது, ''மனுக்களை அளிக்க வரும் அதிமுக எம்.எல்.ஏக்கள், அதை எவ்வாறு பெற வேண்டும் என ஆட்சியரைக் கண்டிக்க முடியாது. மாவட்டத்தின் தலைமை நிர்வாகி ஆட்சியர். மாவட்டத்தின் முதல் குடிமகனாக ஆட்சியர் கருதப்படுகிறார்.

அப்படிப்பட்ட அந்தஸ்து உடைய ஆட்சியரை எழுந்து நின்று மனு வாங்க வேண்டும் என சத்தம் போட்டு, மிரட்டும் தொனியில், அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பேசியது அநாகரிகமானது. கடுமையான கண்டனத்துக்குரியது. இவ்விவகாரம் தொடர்பாகக் காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவித்தார்.

காவல்துறையினரிடம் புகார்

இதற்கிடையே மேற்கண்ட விவகாரம் தொடர்பாக, கோவை கிழக்கு மாவட்ட திமுகவின் சூலூர் தெற்கு ஒன்றியப் பொறுப்பாளர் தளபதி முருகேசன் சூலூர் காவல் நிலையத்தில் மற்றும் மாநகர காவல் ஆணையர் தீபக் எம்.தாமோரிடம் இன்று (ஜூலை 30) புகார் அளித்தார்.

அந்தப் புகாரில், ''அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.பி.வேலுமணி, பொள்ளாச்சி ஜெயராமன், ஏ.கே.செல்வராஜ் உள்ளிட்ட எம்.எல்.ஏக்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் என 20-க்கும் மேற்பட்டோர், கரோனா பரவல் தடுப்பு வழிமுறைகளைப் பின்பற்றாமல், வழிமுறைகளை மீறி, தொற்றுப் பரவும் வகையில் மாவட்ட ஆட்சியர் அறையில் நுழைந்ததோடு, சிறப்பாகப் பணியாற்றி வரும் கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனை மிரட்டும் தொனியில் பேசி அவமரியாதை செய்துள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x