Published : 30 Jul 2021 07:24 PM
Last Updated : 30 Jul 2021 07:24 PM

மதுரை வைகை ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட தற்காலிக தரைப்பாலம்: ஒரே ஆண்டில் 3 முறை நிகழ்ந்த அவலம்

மதுரை

மதுரை குருவிக்காரன் சாலைப்பகுதியில் வைகை ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தற்காலிக பாலம் ஆற்றுவெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

ஒரே ஆண்டில் 3 முறை தற்காலிக தரைப்பாலங்கள் அமைத்து வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டதால் அவை ஸ்திரத்தன்மை இல்லாமல் அவசர கோலத்தில் அமைக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

பெரியாறு அணை நீர்பிடிப்புப் பகுதிகளில் நல்ல மழை பெய்து வருவதால் அந்த அணை நீர் மட்டம் 136.35 அடியாக உயர்ந்துள்ளது. அந்த அணை வேகமாக நிரம்பி வருவதால் அங்கிருந்து வைகை அணைக்கு 1,867 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

நீர் வரத்து அதிகரிப்பால் வைகை அணை 69 அடியை எட்டி நிரம்பியது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தற்போது வைகை அணையில் இருந்து ஆற்றில் 1,916 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது.

அதனால், வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. மதுரை வைகை ஆற்றில் கடந்த 2 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தற்போது தண்ணீர் இரு கரைகளையும் தொட்டப்படி ஓடுகிறது. மதுரையில் வைகை ஆறு குறுக்கே உள்ள கல்பாலம் தரைபாலத்தை தண்ணீர் மூழ்கடித்துச் செல்கிறது.

இந்த கல்பாலம் தரைப்பாலத்தில் வாகனங்கள் அதிகளவு பார்க்கிங் செய்யப்படும். மக்கள் நடந்து சென்று வைகை ஆற்றை கடப்பார்கள். சிறு, குறு நடைபாதை வியாபபாரிகள் பல்வகை வியாபாரங்களை இந்த தரைப்பாலத்தில் செய்து வந்தனர்.

தற்போது இந்த தரைப்பாலம் மூழ்கியதால் அதன் போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டது. மக்கள் நடமாட்டம் இல்லாமல் அப்பகுதியே வெள்ளக்காடாக காணப்படுகிறது.

இந்நிலையில் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் கீழ் வைகை ஆற்றின் குறுக்கே குருவிக்காரன் சாலை சந்திப்புப் பகுதியில் ரூ.23.17 கோடி மதிப்பீட்டில் உயர்மட்டப் பாலம் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகிறது. அதனால், குருவிக்காரன்சாலை தரைப்பாலம் இடிக்கப்பட்டு புதிய பாலம் கட்டுவதால் அதன் அருகிலே வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் வைகை ஆற்றை கடக்க வசதியாக தற்காலிகமாக தற்காலிக தரைப்பாலம் அமைக்கப்பட்டிருந்தது.

இந்த பாலம், வைகை ஆற்றில் தற்போது ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் இரவோடு இரவாக அடித்துச் செல்லப்பட்டது. இந்த தரைப்பாலம் மாநகராட்சியில் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ளது. ஒரே நாள் வெள்ளத்தில் தரைப்பாலம் அடித்துச் செல்லப்பட்டது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சாதாரண இந்த வெள்ளத்திற்கே அடித்துச் செல்லப்படும் அளவிற்கு பலமில்லாமல் அந்த தரைப்பாலம் அமைக்கப்பட்டிருப்பது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இதேபோல், கடந்த சில மாதம் முன் இதேபோல் இதே பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலமும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டிருந்தது. கடந்த ஓராண்டில் 3 முறை பல லட்சம் ரூபாய் செலவில் தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

இப்படி பலமும், உறுதித்தனமையும் இல்லாமல் அமைக்கப்படும் தரைப்பாலத்தில் வெள்ளக்காலத்தில் மக்கள் அதனை பயன்படுத்தும்போது அடித்து செல்லப்பட்டால் உயிர்ச் சேதம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

அதனால், எதிர்காலத்தில் இதுபோல் அவசர கதியில் தரைப்பாலம் பலமில்லாமல் அமைப்பதைத் தவிர்க்க வேண்டும். வைகை ஆற்றில் ஒரே நேரத்தில் தரைப்பாலங்களை இடித்து புதிய பாலங்கள் அமைப்பதால் மதுரையின் வடகரை மற்றும் தென்கரை பகுதிகள் துண்டிக்கப்பட்டு மக்கள் எளிதாக வைகை ஆற்றைக் கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x