Published : 30 Jul 2021 05:04 PM
Last Updated : 30 Jul 2021 05:04 PM
2021-22 ஆம் கல்வி ஆண்டு முதல் மருத்துவ மாணவர் சேர்க்கையில் 27 சதவீத ஓபிசி ஒதுக்கீடு அதிமுகவின் இடைவிடாத சட்டப் போராட்டத்துக்குக் கிடைத்த மற்றொரு சாதனை மைல்கல் என, அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக, ஓபிஎஸ் - ஈபிஎஸ் இன்று (ஜூலை 30) கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
"1980-ம் ஆண்டு எம்ஜிஆர் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 30 சதவீத இட ஒதுக்கீட்டை 50 சதவீதமாக உயர்த்தி, தமிழகத்தில் சமூக நீதிக்கான முதல் வெற்றியை நிலைநாட்டினார். உச்ச நீதிமன்றத்தில் இதனை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டபோது, 1982-ல் அம்பாசங்கர் தலைமையில் இரண்டாம் பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையம் அமைத்து எம்ஜிஆர், தான் கொண்டுவந்த இட ஒதுக்கீட்டினை உறுதி செய்தார்.
இதனைத் தொடர்ந்து, மண்டல் குழு பரிந்துரையின் அடிப்படையில், மத்திய அரசு அலுவலகங்களிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள பொதுத் துறை நிறுவனங்களிலும், பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கி, மத்திய அரசால் 13.08.1990 அன்று ஆணை பிறப்பிக்கப்பட்டது.
அதே சமயத்தில், கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு குறித்து எந்தவித ஆணையும் பிறப்பிக்கப்படவில்லை. இதனை அறிந்த ஜெயலலிதா, சமுதாய நிலையிலும், கல்வித் துறையிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் முன்னேற்றத்துக்கு உதவுகின்ற வகையில், மண்டல் குழுவின் பரிந்துரைகளை விரைந்து முழுமையாக நிறைவேற்றி செயல்படுத்திட மத்திய அரசு முன்வர வேண்டும் என்றும்; மேலும், மண்டல் குழுவின் பரிந்துரைகளை செயல்படுத்துவதில் 27 விழுக்காடு என்பதற்குப் பதிலாக 50 விழுக்காடு என்று இட ஒதுக்கீடு செய்வதை கொள்கையாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும்; மத்திய அரசுத் துறைகள், மத்திய அரசுத் துறை நிறுவனங்கள் ஆகியவற்றின் வேலைவாய்ப்புகளில் மட்டுமின்றி, அனைத்துக் கல்வி நிலையங்களின் அனுமதியிலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 50 விழுக்காடு இட ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றும் மத்திய அரசை வலியுறுத்தி, 30.09.1991 அன்று தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி, அதனை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தவர் ஜெயலலிதா.
தொடர்ந்து, 1993-ல் ஜெயலலிதா, பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 69 சதவீத இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்கும் வகையில், தமிழக சட்டப்பேரவையில் 1993-ம் ஆண்டு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர்கள் (கல்வி நிலையங்களில் இடங்களையும், அரசின்கீழ் வருகின்ற பணிகளில் நியமனங்களை அல்லது பதவிகளையும் ஒதுக்கீடு செய்தல்) சட்ட முன்வடிவினை நிறைவேற்றி, இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 9-வது அட்டவணையில் சேர்த்து, இட ஒதுக்கீட்டுக்கு சட்ட ரீதியிலான பாதுகாப்பை உறுதி செய்தார்.
இதனால், தமிழகத்தில் இன்றும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான 69 சதவீத இட ஒதுக்கீடு தொடர்ந்து பின்பற்றப்பட்டு வருகிறது என்பதைச் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.
இதனைத் தொடர்ந்து, எடப்பாடி பழனிசாமி முதல்வராக இருந்த அதிமுக அரசு, மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இதர மத்திய கல்வி நிறுவனங்களில், ஓபிசி சமூகத்தினருக்கு ஒதுக்கப்பட்ட 27 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும்படி, மத்திய அரசுக்கு 14.3.2018 அன்று கடிதம் எழுதியது. தொடர்ந்து 13.1.2020 வரை பல நினைவூட்டுக் கடிதங்கள் எழுதப்பட்டன. மேலும், பிரதமரை நேரில் சந்திக்கும் போதும் இக்கோரிக்கை வலியுறுத்தப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, அதிமுகவின் சார்பில், மருத்துவம் மற்றும் பல் மருத்துவ இளநிலை மற்றும் முதுநிலைப் படிப்புகளில், இதர பிற்பட்ட வகுப்பினருக்கு அகில இந்திய தொகுப்பில் 50 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கக் கோரி, அப்போதைய அதிமுக அரசின் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் முதன்முதலில் சென்னை உயர் நீதிமன்றத்தில் ரிட் பெட்டிசன் ஒன்றினை தாக்கல் செய்தார். தொடர்ந்து, அரசியல் கட்சிகள் தங்களை அவ்வழக்குடன் இணைத்துக் கொண்டன.
இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் 27.7.2020 அன்று அளித்த தீர்ப்பில், 27 சதவீத இட ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்த மத்திய அரசு, மாநில அரசு மற்றும் இந்திய மருத்துவக் குழுமம் (எம்சிஐ) அடங்கிய குழு ஒன்றை அமைத்து, 2021-2022 முதல் ஓபிசி இட ஒதுக்கீட்டினை செயல்படுத்துவது பற்றி ஆராயும்படி உத்தரவிட்டது.
இதை எதிர்த்து, 2020-21 கல்வி ஆண்டு முதலே 27 சதவீத ஓபிசி இட ஒதுக்கீட்டினை நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி தமிழக அரசு - அதிமுகவின் சார்பிலும் மற்றும் இதர கட்சிகளின் சார்பிலும் உச்ச நீதிமன்றத்தில் எஸ்.எல்.பி தாக்கல் செய்யப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு 2020-ம் ஆண்டு கரோனா பாதிப்பு அதிகமாக உள்ளதாலும், ஏற்கெனவே 2020-21-க்கான மருத்துவச் சேர்க்கைக்கு அதிக காலதாமதம் ஆகிவிட்டதாலும், 2020-2021 ஆம் ஆண்டு மருத்துவக் கல்வி சேர்க்கையில் 27 சதவீத இடஒதுக்கீட்டினை செயல்படுத்துவதற்கு வாய்ப்பில்லை என்று கூறியது.
மேலும், சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி, வரும் 2021-2022 கல்வி ஆண்டு முதல் ஓபிசிக்கான 27 சதவீத இட ஒதுக்கீட்டினை செயல்படுத்தக் குழு அமைக்கப்படும் என்று கூறியது. இதனை அடுத்து, உச்ச நீதிமன்றம் வழக்கை முடித்து வைத்தது.
சமூக நீதியை நிலைநாட்டும் வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பை அதிமுக அரசு பெற்றது. இதன்படி, 27 சதவீத இட ஒதுக்கீட்டைப் பின்பற்ற மத்திய அரசு குழு ஒன்று அமைத்தது. இக்குழுவில் தமிழக அரசின் உறுப்பினராக பி. உமாநாத் 13.8.2020 அன்று நியமிக்கப்பட்டார்.
இக்குழுவின் அறிக்கையின்படி நேற்று (29.7.2021), மருத்துவக் கல்வியில், அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டினை இந்த ஆண்டு முதலே (2021-22) அமல்படுத்தப்படும் என்று உத்தரவிட்டுள்ளதை அதிமுகவின் சார்பில் வரவேற்கிறோம்.
மத்திய அரசு, மருத்துவக் கல்வியில் அகில இந்திய தொகுப்பில் உள்ள இடங்களில் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கு 27 சதவீத இட ஒதுக்கீட்டினை உறுதியாக நின்று அமல்படுத்திய பிரதமருக்கு தமிழக மக்களின் சார்பிலும், அதிமுகவின் சார்பிலும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம்.
அதிமுகவின் சட்டப் போராட்டத்தால், அனைத்து மாநில இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் இட ஒதுக்கீடு உரிமையும் இதன் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு 50 விழுக்காடு என்ற இலக்கினை அடைவதற்கான முயற்சிகளை அதிமுக தொடர்ந்து மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வெற்றி, அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர், ஜெயலலிதா மற்றும் அதிமுகவினால் தொடர்ந்து பின்பற்றி வரும் சமூக நீதிக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும் என்பதை இத்தருணத்தில் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறோம்".
இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT