Published : 30 Jul 2021 04:50 PM
Last Updated : 30 Jul 2021 04:50 PM
மகாத்மா காந்தி சொன்னதுபோல குற்றம் என்பது ஒருவகை நோய். எனவே, குற்றவாளிகளை நோயாளிகளாகக் கருதி அவர்களுக்குச் சிறை அதிகாரிகள் மருத்துவர்களாகச் செயல்பட்டு நல்வழிப்படுத்த வேண்டும் என்று டெல்லி சிறைத்துறைத் தலைவர் சந்தீப் கோயல் தெரிவித்தார்.
வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆப்கா மையத்தில் சிறை அதிகாரிகளுக்குப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இங்கு உதவி கண்காணிப்பாளர்கள், துணை ஜெயிலர்கள், உதவி ஜெயிலர்களுக்கான 9 மாதங்கள் அடிப்படைப் பயிற்சி கொண்ட 26-வது பிரிவு பயிற்சி நிறைவு விழா இன்று (ஜூலை 30) நடைபெற்றது. வேலூர் மத்திய சிறை கவாத்து பயிற்சி மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டெல்லி சிறைத்துறைத் தலைவர் சந்தீப் கோயல் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்தப் பயிற்சியில் டெல்லி திஹார் சிறையைச் சேர்ந்த 53 உதவி கண்காணிப்பாளர்கள், ஆந்திராவை சேர்ந்த 3 துணை ஜெயிலர்கள், தமிழகத்தைச் சேர்ந்த 6 உதவி ஜெயிலர்கள், கேரளாவைச் சேர்ந்த 3 உதவி கண்காணிப்பாளர்கள் என 4 பெண்கள் உட்பட 65 பேர் பயிற்சியை நிறைவு செய்துள்ளனர்.
அடிப்படைப் பயிற்சியின்போது சிறை நிர்வாகம், குற்றவியல், சமூகவியல், சமூகப் பணி, உளவியல், சிறப்புச் சட்டம், மனித உரிமைகள், சிறை மேலாண்மை உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் சிறப்பிடம் பிடித்தவர்களுக்கான பதக்கங்களை டெல்லி சிறைத்துறைத் தலைவர் சந்தீப் கோயல் வழங்கிப் பாராட்டினார்.
முன்னதாகப் பயிற்சி வீரர்களின் அணிவகுப்பை ஏற்றுக்கொண்ட அவர் பேசும்போது, ‘‘சிறை நிர்வாகப் பணி என்பது மிகவும் கடினமானது. ஏழைகள், ஆதரவற்றோர், கொடும் குற்றவாளிகள் பலர் சிறையில் உள்ளனர். அவர்களை நல்வழிப்படுத்தும் பணிக்குத் தொழில் முறையில் பயிற்சி பெறுவது முக்கியம். முதல் முறையாக டெல்லியில் இருந்து சிறை அதிகாரிகள் தமிழ்நாட்டிற்கு வந்து பயிற்சி பெற்றிருக்கிறார்கள். நீங்கள் இங்கே கற்றதை டெல்லி சிறையில் அமல்படுத்த வேண்டும்.
நெல்சன் மண்டேலா கூறியதுபோல் ஒரு சிறைச்சாலையைப் பார்த்தால் அந்த நாட்டின் நாகரிகத்தை அறிந்துகொள்ள முடியும். நீங்கள் உங்கள் சிறைச்சாலையைச் சரியாக நடத்த வேண்டும். நாம் அனைவரும் சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும். சில நேரங்களில் சிறையில் வசதிகள் குறைவாக இருக்கக்கூடும்.
குறைவான வசதியைக் கொண்டு நம்மால் முடிந்த அளவுக்கு சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும். மகாத்மா காந்தி சொன்னது போல குற்றம் என்பது ஒருவகை நோய். எனவே, குற்றவாளிகளை நோயாளிகளாகக் கருத வேண்டும். சிறை அதிகாரிகள் சமூக மருத்துவர்களாகச் செயல்பட்டு சிறைக் கைதிகளை நல்வழிப்படுத்த வேண்டும்’’ என்று சந்தீப் கோயல் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT