Published : 30 Jul 2021 03:10 PM
Last Updated : 30 Jul 2021 03:10 PM
விளைநிலங்கள் பாதிக்கப்படும் என்பதால், சித்தூர் 6 வழிச் சாலையை மாற்றுப் பாதையில் அமைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 30) வெளியிட்ட அறிக்கை:
"திருவள்ளூர் மாவட்டம் தச்சூரில் தொடங்கி ஆந்திர மாநிலம் சித்தூர் வரை ஆறுவழிச்சாலை அமைக்கும் திட்டத்தால் வேளாண் விளைநிலங்கள் பாதிக்கப்படும்; அதனால் அத்திட்டத்தை தரிசு நிலங்கள் வழியாக மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தி, விவசாயிகள் போராடி வருகின்றனர். விவசாயிகளின் கோரிக்கை குறித்துப் பேச அழைப்பு விடுத்த அதிகாரிகள் அவர்களை அவமதித்திருப்பது கண்டிக்கத்தக்கது.
பொன்னேரி அடுத்த தச்சூரில் இருந்து, ஆந்திரத்தின் சித்தூரை இணைக்கும் வகையில், 133 கி.மீ. தொலைவுக்கு ஆறு வழிச்சாலை அமைக்கப்படுகிறது. சென்னையிலிருந்து பெங்களூருவுக்கு அமைக்கப்படும் விரைவுச் சாலை தச்சூர் வழியாக அமைக்கப்படும் நிலையில், அந்தச் சாலையையும், சித்தூரையும் இணைக்கும் வகையில் இந்த ஆறுவழிச் சாலையை அமைக்க மத்திய அரசு தீர்மானித்துள்ளது.
தச்சூரில் தொடங்கி மஞ்சங்காரணை, வடமதுரை, சென்னங்காரனி, வடதில்லை, மாம்பாக்கம், போந்தவாக்கம், பேரிட்டிவாக்கம் வழியாக சித்தூருக்குச் செல்லும் இந்தச் சாலையை அமைப்பதற்காக ஆந்திரத்தில் 2,186 ஏக்கர் நிலங்களும், தமிழகத்தில் 889 ஏக்கர் நிலங்களும் கையகப்படுத்தப்படவுள்ளன.
தமிழகத்தில் மொத்தம் 44 கி.மீ. தொலைவுக்கு நெடுஞ்சாலை அமைப்பதற்காக கையகப்படுத்தப்படும் நிலங்களில் பெரும்பாலானவை முப்போகம் விளையும் நிலங்கள் என்பதால் அவற்றைக் கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரு ஆண்டுகளாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
ஊத்துக்கோட்டை பகுதியில் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்துப் போராடி வரும் விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அவர்களை ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும்படி நில எடுப்பு மாவட்ட வருவாய் அதிகாரி அழைப்பு விடுத்திருந்தார்.
அதையேற்று, விவசாயிகள் பேச்சுவார்த்தைக்கு வந்திருந்த நிலையில், மாவட்ட வருவாய் அதிகாரி உரிய நேரத்துக்குப் பேச்சுவார்த்தை நடத்த வராமல் விவசாயிகளை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்படுகிறது. அதைக் கண்டித்தும், ஆறுவழிச் சாலைத் திட்டத்தை மாற்றுப் பாதையில் செயல்படுத்த வலியுறுத்தியும், ஊத்துக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரில் பொதுமக்களும் விவசாயிகளும் போராட்டம் நடத்தியதால், அப்பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டிருக்கிறது.
தேசிய நெடுஞ்சாலை எண் 716 என்று அழைக்கப்படும் தச்சூர் - சித்தூர் ஆறுவழிச் சாலைத் திட்டம் செயல்படுத்தப்பட்டால், சென்னை - கொல்கத்தா நெடுஞ்சாலையையும், சென்னை - பெங்களூரு விரைவுச் சாலையையும் இணைக்க முடியும்.
சென்னை எண்ணூர் துறைமுகம், காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் ஆகியவற்றுக்கு சரக்குகளைக் கொண்டு செல்வதற்கும் இந்த ஆறுவழிச்சாலைத் திட்டம் வசதியாக இருக்கும் என்று அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. வளர்ச்சிக்கு வழிவகுக்கும் திட்டங்கள் வரவேற்கப்பட வேண்டியவை என்பதில் எந்த ஐயமும் இல்லை. ஆனால், அத்திட்டங்கள் வேளாண்மையை அழிப்பவையாக இருக்கக் கூடாது என்பதுதான் பாமகவின் நிலைப்பாடு ஆகும்.
தச்சூர் - சித்தூர் நெடுஞ்சாலைத் திட்டம் அதன் இப்போதைய வடிவில் செயல்படுத்தப்பட்டால், திருவள்ளூர் மாவட்டம் தும்பாக்கம், பருத்திமேனி குப்பம், பேரண்டூர், பனப்பாக்கம், தொளவேடு, காக்கவாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் நன்செய் நிலங்கள் கையகப்படுத்தப்படும்; அதனால் நூற்றுக்கணக்கான விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள்; பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் வாழ்வாதாரத்தை இழப்பார்கள் என்று கூறப்படுகிறது.
விவசாயத்தையும், மக்களின் வாழ்வாதாரத்தையும் அழித்துவிட்டு இந்த ஆறுவழிச் சாலைத் திட்டத்தை இப்போதைய வடிவத்திலேயே நிறைவேற்ற வேண்டுமா? என்பதை மத்திய, மாநில அரசுகளும், அதிகாரிகளும் மனிதநேயத்துடன் சிந்திக்க வேண்டும்.
சித்தூர் ஆறுவழிச் சாலையில் சில மாற்றங்களைச் செய்வதன் மூலம் விவசாய நிலங்களுக்குப் பெரிய அளவில் பாதிப்பு இல்லாமல் அமைக்க முடியும். விவசாயிகளின் கோரிக்கையும் அதுதான்.
எனவே, சித்தூர் ஆறுவழிச் சாலை திட்டத்தை அதன் இப்போதைய வடிவிலேயே செயல்படுத்த வேண்டும்; அதற்காக எத்தகைய எதிர்ப்பு வந்தாலும் விவசாயிகளின் நிலங்களைக் கையகப்படுத்தியே தீருவோம் என்று பிடிவாதம் பிடிக்காமல், தரிசு நிலங்கள் வழியாக மாற்றுப் பாதையில் தச்சூர் - சித்தூர் ஆறுவழிச்சாலை திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்".
இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT