Published : 30 Jul 2021 09:48 AM
Last Updated : 30 Jul 2021 09:48 AM

இலங்கைத் தமிழர்களின் நலன்: வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

வைகோ: கோப்புப்படம்

புதுடெல்லி

இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற இந்திய அரசு வலியுறுத்தி வருவதாக, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் பதில் அளித்துள்ளார்.

வைகோ எழுத்துப்பூர்வமாக, வெளியுறவுத்துறை அமைச்சருக்கு எழுப்பிய கேள்விகள்:

"1. இலங்கையின் உள்நாட்டுப் போரில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு நீதி விசாரணை கோரி இருக்கின்றார்களா?

2. அவ்வாறு இருப்பின், அது குறித்து உங்கள் நிலைப்பாடு என்ன?

3. இலங்கை அரசு இதுவரை எந்தவிதமான உள்ளக விசாரணையும் மேற்கொள்ளாத நிலையில், இனியும் அதற்கான வாய்ப்புகள் இல்லாத சூழலில், பன்னாட்டு நீதி விசாரணை நடைபெறுவதற்கான முயற்சிகளை, இந்திய அரசு மேற்கொள்ளுமா?

4. இலங்கையில் முஸ்லிம்கள் உடல் அடக்க உரிமைகளைத் திரும்பத் தருவதற்கும், தமிழர்களுடைய நிலங்களில் இலங்கைப் படையினர் நிலை கொண்டு, தமிழர்களைக் கண்காணித்து வருவதையும், அவர்கள் மீது தொடர் அடக்குமுறைகளைத் தடுப்பதற்கும், தூதரக முறையில் இந்தியா ஏதேனும் முயற்சிகளை மேற்கொண்டதா?

5. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த தகவல்களைத் தருக;

6. இல்லை என்றால், அதற்கான காரணங்கள் என்ன?".

ஆகிய கேள்விகளை எழுப்பியிருந்தார்.

வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன்: கோப்புப்படம்

இக்கேள்விகளுக்கு, வெளியுறவுத்துறை இணை அமைச்சர் முரளிதரன் எழுத்துப்பூர்வமாக அளித்த விளக்கம்:

"1. இலங்கையின் உள்நாட்டுப் போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் குறித்து, இலங்கையில் உள்ள தமிழ் அரசியல் கட்சிகள், பன்னாட்டு விசாரணை கோரி இருக்கின்றன.

2 முதல் 6 வரையிலான கேள்விகளுக்கு விளக்கம்:

பல்வேறு இனங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு சமயங்கள் கொண்ட இலங்கை நாட்டில், தமிழர் உள்ளிட்ட அனைத்துக் குடிமக்களும் சமமாக வாழ்வதற்கும், பாதுகாப்பு மற்றும் சமய நல்லிணக்கம் நிலவுவதற்கும், அவர்களுடைய முன்னேற்றம், எதிர்காலக் கனவுகளை, ஒன்றுபட்ட இலங்கை என்ற நாட்டுக்கு உள்ளே நிறைவேற்றிக் கொள்வதற்கும், இந்தியா எப்போதும் உறுதுணையாக இருந்து வருகின்றது.

இந்தப் பொருண்மையில், இந்திய அரசு, இலங்கை அரசுடன் தொடர்ந்து பேசி வருகின்றது; பல்வேறு நிலைகளில் இருதரப்பு பேச்சுகள் நடைபெற்று உள்ளன; இலங்கைத் தமிழர்களின் நலன்களைப் பாதுகாப்பதற்கு இலங்கை அரசு அளித்துள்ள உறுதிமொழிகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றது.

2019, 2020 ஆம் ஆண்டுகளில், இலங்கைக் குடியரசின் தலைவர் இந்தியா வருகை தந்தபோதும், 2020 செப்டெம்பர் 26 ஆம் நாள், இரண்டு நாடுகளின் பிரதமர்கள் இணையக் காணொலி வழியாக நடத்திய இருதரப்புப் பேச்சுகளிலும், 2021 ஜனவரி மாதம், இந்திய வெளியுறவு அமைச்சர் இலங்கை சென்றபோதும், மேற்கண்ட கருத்துகளை, இந்தியா வலியுறுத்தி இருக்கின்றது.

ஐநா மனித உரிமைகள் கவுன்சிலின் (United Nations Human Rights Council - UNHRC), 46 ஆவது கூட்டத் தொடரில், சமத்துவம், நீதி, அமைதி, கண்ணிய வாழ்வு என்ற தமிழர்களின் விருப்பங்களை நிறைவேற்ற இந்தியா வலியுறுத்தியது.

தமிழர்களின் உரிமைகளை மதிக்கின்ற வகையில், உண்மையான அதிகாரப் பகிர்வுதான், இலங்கையின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் என்பதையும் எடுத்துக் கூறியது.

கூடுதலாக, இலங்கை அரசு நல்லிணக்க முயற்சிகளை மேற்கொள்ளவும், மறுவாழ்வுப் பணிகளைச் செயல்படுத்தவும், தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றவும், பன்னாட்டு சமுதாயத்துடன் இணைந்து அத்தகைய முயற்சிகளைத் தொடர்ந்து மேற்கொண்டு, இலங்கையின் அனைத்துத் தரப்பு மக்களும், விடுதலை உணர்வுடன், மனித உரிமைகள் பாதுகாப்புடன் வாழ வகை செய்யுமாறு இந்தியா வலியுறுத்தியது".

இவ்வாறு அவர் பதிலளித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x