Published : 30 Jul 2021 03:16 AM
Last Updated : 30 Jul 2021 03:16 AM
திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்ட புதிய ரக துப்பாக்கி (டிரிகா) நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது.
திருச்சி துப்பாக்கித் தொழிற்சாலையில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் இந்த புதிய ரக துப்பாக்கியை தொழிற்சாலை பொது மேலாளர் சஞ்சய் திவேதி அறிமுகப்படுத்தினார்.
இந்த புதிய ரக டிரிகா துப்பாக்கி 3.1 கிலோ எடை கொண்டது. 7.62X39 மில்லி மீட்டர் சிறிய ரக துப்பாக்கியாகும். இது ராணுவ போர் வாகனங்கள், ஹெலிகாப்டர்கள், பாராசூட் வீரர்கள், காவலர்கள், விமான நிலையம் போன்ற உயர் பாதுகாப்பு மிகுந்த இடங்களில் பாதுகாப்புப் பணியில் உள்ளவர்கள் மற்றும் சிறப்பு செயல்பாட்டு படைகளுக்கு பெரிதும் உதவும் வகையில் மிகுந்த சக்திவாய்ந்த தனிநபர் தானியங்கி துப்பாக்கியாகும்.
டிரிகா துப்பாக்கி சுடும் போது ஏற்படும் ஒளியை மறைத்து, சப்தத்தை குறைத்து, மற்ற துப்பாக்கிகளை விட அதிக தூரத்துக்கு சுடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. திருச்சி அசால்ட் ரைபிள் மற்றும் ஏ.கே.47 துப்பாக்கிகளைப் போன்று டிரிகாவின் பாகங்களை கழற்றி மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது.
இந்த ரக துப்பாக்கியை பாதுகாப்புப் படை வீரர்கள் தங்களது சட்டையிலே மறைத்து வைத்துக் கொள்ளக் கூடிய அளவுக்கு மிகச் சிறிய அமைப்பைக் கொண்டது. இந்த ரக துப்பாக்கி தொழிற்சாலையில் உள்ள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவால் மேம்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில், கூடுதல் பொது மேலாளர்கள் ராஜீவ் ஜெயின், ஏ.கே.சிங், இணை பொது மேலாளர் எஸ். கிருஷ்ணசாமி ஆகியோர் உடனிருந்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT