Published : 29 Jul 2021 09:20 PM
Last Updated : 29 Jul 2021 09:20 PM

காங்கிரஸ், திமுக செய்ய மறந்த இட ஒதுக்கீடு; பிரதமர் மோடி செய்துள்ளார்: அண்ணாமலை பாராட்டு

புதுடெல்லி

மருத்துக் கல்வியில் இடம் கிடைக்குமா, இட ஒதுக்கீடு கிடைக்குமா, என்று ஏங்கித் தவித்த சுமார் 5550 மாணவ மாணவியருக்கு நடப்பு ஆண்டிலேயே பிரதமர் மோடி நம்பிக்கை ஊட்டம் வழங்கியுள்ளார் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
இந்தியா சுதந்திரம் பெற்ற நாள் முதல் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகளின் கூட்டணி ஆட்சிகள் செய்ய மறந்த அல்லது செய்ய மறுத்த இட ஓதுக்கீட்டை, உச்சநீதி மன்றத்தின், இசைவுடன் மத்தியத் தொகுப்பில் இட ஒதுக்கீட்டை வழங்கி சமூக நீதி காத்த பாரதப் பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி.

இட ஒதுக்கீட்டு கிடைக்காமல் பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களும், சமுதாயத்தில் பின் தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட மக்களும், வாய்ப்புக்கள், இல்லாமல் வாடி நின்ற போது, பிரதமர் நரேந்திர மோடியின் நல்லாட்சியில், பிற்படுத்தப்பட்ட மக்களின், ஏழைகளின் நீண்ட காலக் கனவு இன்று பலித்துவிட்டது.

1986 ஆம் ஆண்டு உச்சநீதி மன்றத் தீர்ப்பின் வழிகாட்டுதலின் படியும், 2015ஆம் ஆண்டு சலோனி குமாரி அவர்கள் ஓபிசி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு கேட்டு தாக்கல் செய்த மனுவிற்கு வழங்கப்பட்ட நீதி மன்ற அறிவுரைகளின் படி, அனைவருக்கும் பலன் கிட்டும் வகையில், மருத்துவக் கல்வியில் உள்ள அனைத்து பிரிவுகளுக்கும் பொருந்தும் வகையில், மருத்துவ பட்டப்படிப்பு, பட்ட மேல் படிப்பு, எம்.டி, எம்.எஸ், பல் மருத்துவம் மேலும் பட்டயம் உள்ளிட்ட மருத்துவம் உள்ளிட்ட அனைத்து படிப்புக்களுக்கும் இந்த இட ஒதுக்கீடு பொருந்தும் என்று அறிவித்திருப்பது நாடு போற்றும், மகிழ்ச்சிக்குரிய செய்தி.

மருத்துக் கல்வியில் இடம் கிடைக்குமா? இட ஒதுக்கீடு கிடைக்குமா? என்று ஏங்கித் தவித்த சுமார் 5550 மாணவ மாணவியருக்கு நடப்பு ஆண்டிலேயே நம் பிரதமர் மோடி நம்பிக்கை ஊட்டம் வழங்கியுள்ளார்.

சமுதாயத்தில் பின் தங்கிய இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27%ம் இட ஒதுக்கீடும், பொருளாதாரத்தில் பின் தங்கிய மக்களுக்கு சுமார் 10%ம் இட ஒதுக்கீடும், நடப்பு 2020-21ஆம் ஆண்டிலேயே வழங்கி இருப்பது கூடுதல் மகிழ்ச்சிக்குரிய செய்தியாகும்.

இந்திய மக்கள் போற்றிக் கொண்டாடும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த முத்தாய்ப்பான முடிவினை இன்று வெளியிட்டு பிற்படுத்தப்பட்ட மக்களின் வாழ்வில் இன்று தீப ஒளி ஏற்றி வைத்த நம் பிரதமர் மோடிக்கு தமிழக மக்கள் சார்பிலும் , பாஜக சார்பில் பாராட்டுக்களையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x