Published : 29 Jul 2021 08:20 PM
Last Updated : 29 Jul 2021 08:20 PM
கோவை தடாகம் பகுதி செங்கல் சூளைகளால் இயற்கைச் சீரழிவு ஏற்படுவது தொடர்பாகத் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக்கொண்ட வழக்கில் மாவட்ட ஆட்சியர் நிலை அறிக்கை தாக்கல் செய்துள்ளார்.
கோவை தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவது குறித்து நாளிதழில் வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு, சென்னையில் உள்ள தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தாமாக முன்வந்து வழக்குப் பதிந்து, விசாரணைக்கு எடுத்துக்கொண்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்தியகோபால் ஆகியோர் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:
''நாளிதழ் செய்தியைப் பார்க்கும்போது, தடாகம் பள்ளத்தாக்குப் பகுதியில் உள்ள செங்கல் சூளைகளின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்த எந்த விதிமுறையும் இல்லை. இதனால், அனுமதி இல்லாத செங்கல் சூளைகள் உருவாகி, பெரிய அளவில் குழிகள் தோண்டப்பட்டதால் மண்வளம், சுற்றுச்சூழல் பாதிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அதிகாரிகளின் கவனத்துக்குக் கொண்டுசென்றும் சூளைகளை ஒழுங்குபடுத்த அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. அதிகப்படியான சுரண்டலால் இயற்கை சீரழிக்கப்படுவதாகவும், நிலத்தடி நீர்மட்டம் குறைவதாகவும் அளிக்கப்பட்ட புகாருக்கு அதிகாரிகள் காதை மூடிக்கொண்டிருந்துள்ளனர். சுற்றுச்சூழல் விதிகளைப் பின்பற்ற பெரும்பாலான செங்கல் சூளைகளில் அறிவியல்பூர்வமாக எந்த வழிமுறையும் இல்லாததால் காற்று மாசும் ஏற்படுகிறது.
உண்மை நிலை அறியக் குழு
தடாகம் பகுதியில் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும், அங்குள்ள செயல்பாடுகளை எப்படி முறைப்படுத்தலாம் என்பதைத் தெரிவிக்கவும் குழு அமைக்கப்படுகிறது. இந்தக் குழுவில் கோவை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு மாநிலச் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம், புவியியல், கனிமவளத் துறையில் தலா ஒரு மூத்த அதிகாரி ஆகியோர் இடம்பெறுவார்கள். இவர்கள் அந்தப் பகுதியை ஆய்வு செய்து அங்குள்ள நிலவரம், விதிமீறல் இருந்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கை ஆகியவை குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்.
மேலும், அந்தப் பகுதியில் வணிகரீதியாக மண் எடுப்பதற்கு சுற்றுச்சூழல் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதா, அதிகப்படியான கனிமவளக் கொள்ளையைத் தடுக்க கனிம வளத்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, கனிம வளத்துறையிடம் அனுமதி பெறப்பட்டுள்ளதா என்பதைக் குழுவினர் ஆய்வு செய்ய வேண்டும்.
அரசு பதில் அளிக்க வேண்டும்
அனுமதி அளிக்கப்பட்டவர்களில் யாரேனும் அளவுக்கு மீறி மண்ணைத் தோண்டி எடுத்துள்ளனரா, அவர்கள் மீது ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா, அங்குள்ள நடவடிக்கைகளால் அருகில் உள்ள நீர்நிலைகள், ஆறுகள், நீரோடைகள் ஏதேனும் பாதிக்கப்பட்டுள்ளதா, அறிவியல் பூர்வமற்ற நடவடிக்கைகளால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்துள்ளதா என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். இயற்கைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டிருந்தால், அது எந்தவிதமான பாதிப்பு என்பதையும், அதைச் சீர்செய்யத் தேவையான நடவடிக்கைகள் குறித்து பரிந்துரைகளையும் தெரிவிக்க வேண்டும். பாதிப்பு ஏற்படக் காரணமானவர்களிடம் இருந்து சுற்றுச்சூழல் பாதிப்புக்கான இழப்பீட்டுத் தொகையை வசூலிப்பதற்கான கணக்கீட்டையும் மேற்கொள்ள வேண்டும்.
மேலும், இதுகுறித்து தமிழக தலைமைச் செயலர், சுற்றுச்சூழல், வனத்துறைச் செயலர், தொழில்துறை முதன்மைச் செயலர், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலர், புவியியல், கனிமவளத்துறை ஆணையர், கோவை மாவட்ட ஆட்சியர், சின்னதடாகம், எண்.24 வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம் பன்னிமடை கிராமப் பஞ்சாயத்துகளின் செயலர்கள் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிடப்படுகிறது''.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
அதைத் தொடர்ந்து, கடந்த 15-ம் தேதி கோவை மாவட்ட ஆட்சியர் தீர்ப்பாயத்தில் நிலை அறிக்கையைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விசாரணை ஆகஸ்ட் 10-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT