Last Updated : 29 Jul, 2021 08:07 PM

 

Published : 29 Jul 2021 08:07 PM
Last Updated : 29 Jul 2021 08:07 PM

ரேஷன் கடை விற்பனையாளர் பணிக்குத் தகுதியானவர்கள் விரைவில் நியமனம்: கூட்டுறவுத்துறை அமைச்சர் தகவல்

தமிழகத்தில் ரேஷன் கடைகளில் விற்பனையாளர் பணி உள்ளிட்டவற்றில் காலியாக உள்ள 3,997 பணியிடங்களுக்கு, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியானவர்கள் விரைவில் நியமிக்கப்படுவர் என்று கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டத்தில் கூட்டுறவுத் துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் இன்று நடத்தப்பட்டது. கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலைமை வகித்தார். கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் சண்முக சுந்தரம், மாவட்ட ஆட்சியர் கார்மேகம், எம்எல்ஏக்கள் ராஜேந்திரன், அருள், சதாசிவம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.

பின்னர் அமைச்சர் ஐ.பெரியசாமி செய்தியாளர்களிடம் கூறியதாவது:

''தமிழகத்தில், 2021-22ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.11 ஆயிரத்து 500 கோடி பயிர்க் கடன் வழங்க முதல்வர் திட்டமிட்டுள்ளார். விவசாயிகளுக்கு, உரிய நேரத்தில் உரங்கள் வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனையாளர், உதவியாளர் பணி உள்பட மொத்தம் 3,997 காலிப் பணியிடங்கள் உள்ளன. அவற்றை, அந்தந்த மாவட்டங்களைச் சேர்ந்த தகுதியானவர்களைக் கொண்டு, நிரப்புவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

பயிர்க் கடன் தள்ளுபடியைப் பொறுத்தவரையில், பல்வேறு புகார்களின் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள 4,451 விவசாயக் கடன் சங்கங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வு இம்மாதத்தில் நிறைவடையும். குறிப்பாக, பயிர்க் கடன் வழங்கப்பட்டபோது விதிமுறைகள் பின்பற்றப்பட்டனவா? எனத் துறை அலுவலர்கள் அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. சுய உதவிக் குழுக்களுக்கு அதிகபட்சமாகக் கடன் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு அறிவித்தபடி, ஏழை மக்களுக்கு கரோனா நிவாரண நிதியாக 2.11 கோடி ரேஷன் கார்டுதாரர்களுக்கு தலா ரூ.4 ஆயிரமும், 14 வகை மளிகைப் பொருட்களும் வழங்கப்பட்டன. இந்தப் பணி 99 சதவீதம் முடிவடைந்துள்ளது. ரேஷன் கடைகளில் தரமான அரிசி வழங்கவும், ஏழை எளிய மக்களுக்கு அனைத்துப் பொருட்கள் கிடைக்கவும் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மாதம் 30 நாட்களும் பொருட்கள் வழங்கப்படும்.

முழு நேர, பகுதி நேர ரேஷன் கடைகளைப் புதிதாகக் கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். வாடகைக் கட்டிடத்தில் செயல்பட்டு வரும் 7 ஆயிரம் ரேஷன் கடைகளுக்கு, 5 ஆண்டுகளில் புதிய கட்டிடம் கட்டப்படும். ரேஷன் கார்டு இல்லாதவர்களுக்கு விண்ணப்பித்த 15 நாட்களில் புதிய ரேஷன் கார்டு வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவு விவசாயக் கடன் சங்கங்களைப் பொறுத்தவரையில் சுய உதவிக்குழு கடன், கல்விக் கடன், வீடு கட்டக் கடன், தொழிற்கடன், வாகனம் வாங்குவதற்குக் கடன் என எந்தக் கடன் கேட்டாலும் வழங்க வேண்டும். கூட்டுறவுக் கடன் சங்கங்கள், பல்நோக்குப் பணி மையமாக விரிவுபடுத்தப்படும். கூட்டுறவுக் கடன் சங்கங்களில், நிலம் இல்லாதவர்கள், 18 வயது நிரம்பிய மாணவர்கள், பெண்கள் என அனைவரையும் உறுப்பினராகச் சேர்க்க வேண்டும். மாணவர்கள் படித்து முடித்தவுடன், வேலைவாய்ப்பின்றி உள்ளனர். அவர்கள் தொழில் தொடங்க, கூட்டுறவு சங்கத்தில் கடனுதவி வழங்க முடியும்.

கூட்டுறவு மருந்துக் கடைகளில் தரமான மருந்துகளைக் குறைந்த விலைக்கு வழங்குவதில் அரசு உறுதியாக உள்ளது. கூட்டுறவுத் துறையில் தவறுகளுக்கு இடமளிக்கக் கூடாது. கூட்டுறவு சங்கங்கள் மக்கள் சொத்து, அதை உறுதிப்படுத்திட வேண்டும். பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது, கூட்டுறவு வங்கிகளில் பணம் மாற்றப்பட்டதாக எழுந்த புகார் தொடர்பாகக் கூட்டுறவுத்துறை அலுவலர்கள் அரசுக்கு அறிக்கை அளிப்பார்கள், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

கூட்டுறவு சங்கத் தேர்தலைப் பொறுத்தவரை, மத்திய அரசு கொண்டுவந்துள்ள சட்டத் திருத்தம் பொருந்தாது என 2 நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். கூட்டுறவு என்பது மாநில உரிமையைப் பொறுத்தது. எனவே, விரைவில் சட்ட வல்லுநர்களைக் கலந்து ஆய்வு செய்து முடிவு எடுக்கப்படும். மாநிலக் கூட்டுறவு வங்கி மூலம் ரூ.2,500 கோடி வழங்கி பயிர் கடன் அளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

கடந்த காலத்தில், அடங்கலில் குறிப்பிடாத பயிர்களுக்குப் பயிர்க் கடன் வழங்கியது, கூட்டுறவு வங்கியில் நிதியே இல்லாமல் நகைக் கடன் வழங்கியது போன்ற நிபந்தனைகளை மீறிய முறைகேடுகள் மேற்கொள்ளப்பட்டது தெரியவந்துள்ளது. அது தொடர்பான விவரங்கள் சேகரிக்கப்பட்டு, உரிய நடவடிக்கை எடுக்கப்படும். பயோ மெட்ரிக் குறைபாடுகள் குறித்து, ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில், அதில் குறைபாடுகள் முழுமையாக நீக்கப்படும். தேர்தல் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்துவது அரசியல்''.

இவ்வாறு அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x