Published : 29 Jul 2021 05:34 PM
Last Updated : 29 Jul 2021 05:34 PM

கீழடி, சிவகலையில் திறந்தவெளி அருங்காட்சியகம்: முதல்வர் ஸ்டாலினுக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை

சென்னை

“நாளந்தா, சாரநாத், லோத்தல், தொளவீரா, அமராவதி ஆகிய பகுதிகளில் நடத்திய அகழாய்வுகளைத் திறந்தவெளி அருங்காட்சியகங்களாக அமைத்துள்ளது போன்று தமிழக அரசும் கீழடி மற்றும் சிவகலை பகுதியைத் திறந்தவெளி அருங்காட்சியங்களாக உருவாக்க வேண்டும்” என முதல்வருக்கு சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

இதுகுறித்து முதல்வர் ஸ்டாலினுக்கு மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி., சு.வெங்கடேசன் எழுதியுள்ள கடிதம்:

“தமிழக முதல்வருக்கு வணக்கம்,

மத்திய அரசின் தொல்லியல் துறை நாளந்தா, சாரநாத், லோத்தல், தொளவீரா, அமராவதி ஆகிய பகுதிகளில் நடத்திய அகழாய்வுகளை அனைவருக்கும் காட்சிப்படுத்தும் வகையில் திறந்தவெளி அருங்காட்சியகங்களை அமைத்துள்ளது.

அதைப்போன்று தமிழக அரசும் கீழடி மற்றும் சிவகலை பகுதியைச் சங்ககால வாழ்விடப் பகுதியாக அறிவித்து திறந்தவெளி அருங்காட்சியங்களை உருவாக்க வேண்டும்.

அகழாய்வுக் குழிகள் காலத்தின் கண்ணாடி போன்றவை. அதன் கண்டுபிடிப்புகளை இருப்பிடம் விட்டு அகலாமல் காட்சிப்படுத்துவது வரலாற்றுத் துறைக்குச் செய்யும் நேர்மையான பங்களிப்பாகும்.

அந்த வகையில் கீழடி மற்றும் சிவகலையில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்க வரும் நிதிநிலை அறிக்கையில் கூடுதல் நிதியினை அரசு ஒதுக்கீடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்”.

இவ்வாறு சு.வெங்கடேசன் கோரிக்கை வைத்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x