Published : 29 Jul 2021 05:22 PM
Last Updated : 29 Jul 2021 05:22 PM

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் ஓபிசிக்கு 27% இட ஒதுக்கீடு; பாமகவுக்கும் தமிழகத்துக்கும் கிடைத்த வெற்றி: அன்புமணி

அன்புமணி: கோப்புப்படம்

சென்னை

அகில இந்தியத் தொகுப்பு மருத்துவ இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்திருப்பது, ஒட்டுமொத்த தமிழகத்துக்குக் கிடைத்த வெற்றி என, பாமக இளைஞரணித் தலைவரும் மாநிலங்களவை உறுப்பினருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்புமணி இன்று (ஜூலை 29) வெளியிட்ட அறிக்கை:

"மருத்துவக் கல்விக்கான அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருக்கிறது. பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் நலனுக்கான பாமகவின் நீண்டகாலக் கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

இந்தியாவில் உள்ள அனைத்து மாநில அரசுகள் மற்றும் மத்திய அரசு மருத்துவக் கல்லூரிகளில் உள்ள இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான இடங்களில் 15 விழுக்காடும், முதுநிலை மருத்துவப் படிப்புக்கான இடங்களில் 50% இடங்களும் அகில இந்தியத் தொகுப்புக்கு வழங்கப்படுகின்றன.

ஆனால், அந்த இடங்களில் ஓரிடம் கூட பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு வழங்கப்படுவதில்லை. இந்த நிலையை மாற்றி அகில இந்தியத் தொகுப்பில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு 27% இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்று பாமக பல ஆண்டுகளாக வலியுறுத்தி வந்தது. இதற்காக உச்ச நீதிமன்றத்தில் நான்தான் முதன்முதலில் வழக்குத் தொடர்ந்தேன்.

பின்னர், உச்ச நீதிமன்றத்தின் அறிவுறுத்தல்படி உயர் நீதிமன்றத்திலும் நான் வழக்குத் தொடர்ந்தேன். தமிழகத்தின் பிற கட்சிகளும் இதே வழக்கைத் தொடர்ந்த நிலையில், அந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் ஓபிசி வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்க ஆணையிட்டது.

அதன் பின்னர் ஓராண்டு நிறைவடைந்துவிட்ட நிலையில், இப்போது தமிழகத்தில் மட்டுமின்றி, நாடு முழுவதும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு ஆணையிட்டிருக்கிறது.

இந்த இட ஒதுக்கீடு நடப்பாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் தேசிய அளவில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு ஒவ்வொரு ஆண்டும் சுமார் 5,000 இடங்கள் கூடுதலாகக் கிடைக்கும். இது பிற்படுத்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவக் கனவுகளை நனவாக்கும். இந்த அறிவிப்பு வரவேற்கப்பட வேண்டியதாகும்.

இது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு இட ஒதுக்கீடு கோரி முதன்முதலில் வழக்குத் தொடர்ந்த பாமகவுக்கும், தமிழகத்தின் பிற அரசியல் கட்சிகளுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

அகில இந்திய ஒதுக்கீட்டுக்கான இடங்களில் இப்போது பட்டியலினம் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு மட்டும் முறையே 15%, 7.5% இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது. பாமக நிறுவனர் ராமதாஸின் வழிகாட்டுதல்படி இந்த இட ஒதுக்கீட்டை பட்டியலினம், பழங்குடியினத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சராக இருந்தபோது 2007-08ஆம் ஆண்டில் நான்தான் வழங்கினேன். இப்போது பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27% இட ஒதுக்கீடு, நான் தொடர்ந்த வழக்கின் காரணமாக நடைமுறைப்படுத்தப்படுவது இரட்டிப்பு மகிழ்ச்சியளிக்கிறது.

தமிழகத்தைச் சேர்ந்த பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு இது சிறந்த வாய்ப்பு ஆகும். மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையின்போது தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் இவ்வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, இந்தியாவில் எந்தக் கல்லூரியில் வாய்ப்பு கிடைத்தாலும் அதைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

அகில இந்தியத் தொகுப்பு ரத்து செய்யப்பட்டு, அனைத்து இடங்களும் மாநில அரசுகளால் நிரப்பப்பட வேண்டும் என்பதுதான் பாமகவின் நிலை ஆகும். அந்த இலக்கை அடைவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் பாமக மேற்கொள்ளும்".

இவ்வாறு அன்புமணி தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x