Published : 29 Jul 2021 05:50 PM
Last Updated : 29 Jul 2021 05:50 PM
147 செல்போன் எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. செல்போன் ஒட்டுக் கேட்புக்கு 8 லட்சம் டாலர் கொடுத்திருக்கிறார்கள். இப்படி ஒரு மோசமான ஆட்சி மத்தியில் மோடி தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.
புதுச்சேரி மாநில ஐஎன்டியுசி முன்னாள் தலைவர் ரவிச்சந்திரன் உருவப்படத் திறப்பு விழா மற்றும் புகழஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி வேல் சொக்கநாதன் திருமண நிலையத்தில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது.
இதில் முன்னாள் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு பேசியதாவது,
‘‘புதுச்சேரியில் கிரண்பேடியை 5 ஆண்டுகாலம் ஆளுநராக நியமித்து நம்மை வாட்டி வைத்தார்கள். அனைத்துத் திட்டங்களையும் முடக்கினார்கள். இதையெல்லாம் எதிர்த்துப் போராடினோம்.
புதிய கல்விக் கொள்கையை எதிர்க்க வேண்டும், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்க்க வேண்டும், சிஏஏ – என்ஆர்சியை எதிர்க்க வேண்டும், மின்துறையைத் தனியார் மயமாக்குவதை எதிர்க்க வேண்டும், இந்தி திணிப்பை எதிர்க்க வேண்டும் என்பதுதான் காங்கிரஸ் கொள்கை. அந்தக் கொள்கையைக் கருத்தில் கொண்டு பல போராட்டங்களை நடத்தினோம். சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றினோம்.
இதைப் பார்த்த பிரதமர் மோடி, முதல்வர் மாநாட்டில் நீங்கள் எல்லா திட்டங்களையும் எதிர்க்கிறீர்கள் என்று கூறினார். அதற்கு நான், புதுச்சேரி மக்கள் ஏற்கும் திட்டத்தை எதிர்க்க மாட்டோம். மக்கள் ஏற்காத திட்டத்தைக் கண்டிப்பாக எதிர்ப்போம் என்றேன்.
கணவன், மனைவி போனில் பேச முடியவில்லை, நண்பர்களிடம் பேச முடியவில்லை. ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி, பாஜகவைச் சேர்ந்தவர்கள், முன்னாள் சிபிஐ இயக்குநர் எனப் பலரது போன்களையும் ஒட்டுக் கேட்டுள்ளனர். 2019-ல் கர்நாடகாவில் ஆட்சியைக் கவிழ்க்க முன்னாள் முதல்வர்கள் சித்தராமையா, குமாரசாமி ஆகியோரின் உதவியாளர் செல்போன்களை ஒட்டுக் கேட்டு இருக்கிறார்கள்.
இதுகுறித்து விசாரணை வைக்கச் சொன்னால் அதற்கு மோடி அரசு தயாராக இல்லை. 147 செல்போன் எண்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளன. செல்போன் ஒட்டுக் கேட்புக்கு 8 லட்சம் டாலர் கொடுத்திருக்கிறார்கள். புதுச்சேரியில் ஆட்சியைக் கவிழ்க்கும்போது என்னுடைய செல்போனையும் ஒட்டுக் கேட்டிருப்பார்கள் என்று நினைக்கிறேன். இப்படி ஒரு மோசமான ஆட்சி மத்தியில் மோடி தலைமையில் நடந்து கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் இருக்கும் ஆட்சி நடக்கிறதா? இல்லையா? என்று யாருக்கும் தெரியவில்லை. இப்போது 10 ஆயிரம் பேருக்குப் புதிதாக பென்ஷன் கொடுக்கிறார்களாம். இது காங்கிரஸ் ஆட்சியில் முடிவு செய்து நிதி ஒதுக்கப்பட்டது. காங்கிரஸ் ஆட்சியில் கிரண்பேடி தடுத்து நிறுத்தியதற்கு இப்போது ஒப்புதல் கொடுக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு மோசமான ஆட்சி புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறது.
முதல்வர் ரங்கசாமி எதைப் பற்றியும் கவலைப்படவில்லை. எல்லா இலாகாவையும் அவர் வைத்துக்கொண்டு ஒரு வேலையும் செய்வதில்லை. மாநிலத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக இருக்கிறது. இப்போது பென்ஷன் ரூ.500 உயர்த்திக் கொடுத்திருக்கிறார். வருகிற நிதியைப் பிரித்துக் கொடுத்துவிட்டு வேலை முடிந்துவிட்டது என்று முதல்வர் செல்கிறார்.
அரசுப் பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மருத்துவக் கல்வியில் 10 சதவீத இட ஒதுக்கீடு பெற்றுத் தரவில்லை. தனியார் மருத்துவக் கல்லூரியில் அரசு ஒதுக்கீடாக 50 சதவீத இட ஒதுக்கீடு பெறவில்லை. புதுச்சேரியில் அமைச்சர்கள் ஆய்வு செய்கிறார்களே தவிர, எந்தவொரு மக்கள் நலத்திட்டமும் நடைபெறவில்லை.
ஆட்சிக்கு வந்தால் அரிசி போடுவோம், மாநில அந்தஸ்து பெறுவோம், கடனைத் தள்ளுபடி செய்வோம், மானியத்தை உயர்த்திப் பெறுவோம், மில்லைத் திறப்போம் என்றார்கள். ஆனால், இந்த ஆண்டு புதுச்சேரிக்கு கூடுதலாக ரூ.24 கோடி தான் மானியமாகக் கொடுத்திருக்கிறார்கள். இவர்கள் மோடியிடம் இருந்து நிதியைப் பெற்று விடுவார்களா? மோடி இவர்களையும் பார்ப்பார், இவர்களது தாத்தாவையும் பார்ப்பார். மோடி அனைத்தையும் கேட்பார். எதுவும் செய்ய மாட்டார்.
மாநில அந்தஸ்து வாங்கதான் பாஜகவுடன் கூட்டணி வைப்பதாக முதல்வர் கூறினார். இப்போது மாநில அந்தஸ்து வாங்கச் சொல்லுங்கள் பார்ப்போம். எதுவும் வாங்க முடியாது. கூட்டணிக் கட்சித் தலைவருக்கே தெரியாமல் பாஜக 3 நியமன எம்எல்ஏக்களைப் போடுகிறது. முதல்வரிடம் சண்டைபோட்டு துணை முதல்வர், சபாநாயகர், அமைச்சர்கள் பதவி கேட்கிறார்கள். இது ஒரு ஆட்சியா? இப்படி மக்களுக்கு துரோகம் செய்கின்ற ஆட்சி புதுச்சேரியில் நடந்து கொண்டிருக்கிறது.
புதுச்சேரியில் பஞ்சாயத்துத் தேர்தல் வரவுள்ளது. அடுத்ததாக நாடாளுமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதனால் ஐஎன்டியுசி தொழிற்சங்கத்தை வலுப்படுத்த வேண்டும். தொழிலாளர்களின் உரிமையைப் பெற்றுத் தர வேண்டும். காங்கிரஸ் ஒரு ஆர்ப்பாட்டத்தை அறிவித்தால் ஐஎன்டியுசி முன்வந்து நிற்க வேண்டும். அடுத்த ஆண்டு கர்நாடகாவில் தேர்தல் வருகிறது. அதில் காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அதேபோல் 2024-ல் ராகுல் காந்தி பிரதமர் ஆவார். அதற்காக நாம் அனைவரும் உழைக்க வேண்டும்.’’
இவ்வாறு நாராயணசாமி பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT