Published : 29 Jul 2021 03:59 PM
Last Updated : 29 Jul 2021 03:59 PM
தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா 3-வது அலையை எதிர்கொள்ள 1,000 படுக்கைகள் கொண்ட கோவிட் கேர் சென்டர் அமைக்கப்பட்டு வருவதாக, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் கண்காணிப்பாளர் ஜி.பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழக மேலாண்மை இயக்குநர் மற்றும் தூத்துக்குடி மாவட்ட வளர்ச்சிப் பணிகள் கண்காணிப்பு அலுவலர் ஜி.பிரகாஷ் இன்று (ஜூலை 29) கோவில்பட்டிக்கு வந்தார். அவர் கோவில்பட்டி தனிக்குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கப்படுவதை ஆய்வு செய்தார். தனிக்குடிநீர் திட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய பணிகளை ஆய்வு செய்தார். மேலும், அந்த திட்டத்தில் பதிக்கப்பட்ட பகிர்மானக் குழாய் மூலம் விரைவில் வீடுகளுக்கு குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.
தொடர்ந்து, கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ.10.5 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் தாய் - சேய் நலப் பிரிவு புதிய கட்டிடத்தைப் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவமனை வளாகத்தில் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் ரூ.1 கோடி மதிப்பில் நிறுவப்பட்டு வரும் ஆக்சிஜன் உற்பத்தி மையத்தைப் பார்வையிட்டார்.
தொடர்ந்து, மாவட்ட வளர்ச்சிப் பணிகள் கண்காணிப்பாளர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறும்போது, "கரோனா 3-வது அலை வந்தால் தூத்துக்குடி மாவட்டத்தில் அதனை எதிர்கொள்ள தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் 1,000 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. கோவில்பட்டி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் 250 ஆக்சிஜன் படுக்கைகள் உள்ளன. இதில், ஆக்சிஜன் சப்ளையில் சிறிய வேலைகள் உள்ளன.
மேலும், 1,000 படுக்கைகள் கொண்டு கோவிட் கேர் சென்டர் அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. அதேபோல், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட மற்றும் தாலுக்கா மருத்துவமனைகளுக்கு கரோனா சம்பந்தமான மருந்துகளைச் சுகாதாரத்துறை அறிவுரைப்படி இப்போதே வழங்கப்பட்டு வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தைப் பொறுத்தவரை கரோனா தடுப்பூசி முதல் தவணை மட்டும் சுமார் 20 சதவீதம் மக்களுக்குச் செலுத்தப்பட்டுள்ளது. 2-வது தவணையும் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் சுமார் 14 சதவீதம் பேர் உள்ளனர். 3-வது அலையை எதிர்கொள்ள மருத்துவத் துறை, சுகாதாரத்துறை, உள்ளாட்சித் துறை ஆகியவை தயாராக உள்ளன.
கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குத் தேவையான மருத்துவர் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும். கோவில்பட்டி சிறப்பு நிலை நகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்.
அதேபோல், கோவில்பட்டி புதிய கூடுதல் பேருந்து நிலையத்தைச் செயல்படுத்துவது தொடர்பாக ஆய்வு செய்து வருகிறோம். மேலும், இங்கு விதிவிலக்கு பெற்று ஷேர் ஆட்டோ முறையைச் செயல்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சர்குலர் பேருந்துகளும் இயக்கப்படும். நிச்சயமாகப் புதிய திட்டங்களுடன் புதிய கூடுதல் பேருந்து நிலையம் செயல்படுத்தப்படும்".
இவ்வாறு ஜி.பிரகாஷ் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT