Published : 29 Jul 2021 03:23 PM
Last Updated : 29 Jul 2021 03:23 PM

மேகதாது அணை; கர்நாடகச் சதியை முறியடிக்க தனிக்குழு அமைக்க வேண்டும்: ராமதாஸ்

ராமதாஸ்: கோப்புப்படம்

சென்னை

மேகதாது அணை தொடர்பான கர்நாடகச் சதியை முறியடிக்க தனிக்குழு அமைக்க வேண்டும் என, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக, ராமதாஸ் இன்று (ஜூலை 29) வெளியிட்ட அறிக்கை:

"கர்நாடகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டபிறகு ஊடகங்களுக்கு அளித்த முதல் நேர்காணலிலேயே, காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையைக் கர்நாடக அரசு கட்டியே தீரும்; அதற்கு அனுமதி பெறுவதற்காக மத்திய நீர்வளத்துறை அமைச்சரை ஓரிரு நாட்களில் சந்திக்கவிருக்கிறேன் என்று பசவராஜ் பொம்மை கூறியிருக்கிறார். புதிய முதல்வராக பொறுப்பேற்ற ஒருவர், தமிழகத்துடனான உறவை வலுப்படுத்த முயல்வதற்கு மாறாக சீர்குலைக்கும் செயல்களில் ஈடுபடுவது கண்டிக்கத்தக்கது.

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் புதிய அணையைக் கட்டிவிட வேண்டும் என்பதில், இதுவரை முதல்வராக இருந்த எடியூரப்பாவும், இப்போது முதல்வராகப் பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மையும் உறுதியாக உள்ளனர். மேகதாது அணையைக் கட்டுவதற்காக அறத்துக்கு மாறாக எதையும் செய்ய அவர்கள் தயாராக இருக்கிறார்கள். இதைத் தமிழக அரசு புரிந்துகொண்டு விழிப்புடன் செயல்பட வேண்டும்.

மேகதாது அணை கட்டப்பட்டால் அதுதான் கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்படும் மிகப்பெரிய அணையாக இருக்கும். தொடக்கத்தில் ரூ.5,912 கோடி செலவில் 67.14 டிஎம்சி கொள்ளளவில் மேகதாது அணையைக் கட்டுவதற்கு திட்டமிட்ட கர்நாடக அரசு, 2019-ம் ஆண்டில் அணைக்கான மதிப்பீட்டை ரூ.9,000 கோடியாக உயர்த்தியது.

மேகதாது அணையின் கொள்ளளவும் 70 டிஎம்சிக்கும் கூடுதலாக அதிகரிக்கப்பட்டது. இது ஏற்கெனவே கர்நாடகத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜசாகர் அணையின் கொள்ளளவான 49.45 டிஎம்சியை விட 42% அதிகம் ஆகும்.

இந்த அணையும் கட்டப்பட்டால் கர்நாடகத்தில் காவிரி மற்றும் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளின் அதிகாரபூர்வ கொள்ளளவு 184.57 டிஎம்சியாக அதிகரிக்கும். நீர்நிலைகளை இணைத்து சட்டவிரோதமாக கர்நாடக அரசு சேமித்து வைத்துள்ள 40 டிஎம்சி நீரையும் சேர்த்தால் மொத்தக் கொள்ளளவு 225 டிஎம்சியாக அதிகரித்துவிடும். அதன்பின், தமிழகத்துக்கு ஒரு சொட்டு காவிரி நீர் கூட கிடைக்காது.

தமிழகத்துக்கு வரும் காவிரி நீரைத் தடுப்பது 1892-ம் ஆண்டில் சென்னை மாகாணத்துக்கும், மைசூர் மாகாணத்துக்கும் இடையே செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்துக்கும், காவிரி நடுவர் மன்றம் மற்றும் உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்புக்கும் எதிரானது ஆகும். அதனால் மேகதாது அணைக்கு உச்ச நீதிமன்றமும், மத்திய அரசும் அனுமதி அளிக்காது; அனுமதி அளிக்கவும் முடியாது.

இதை உணர்ந்துகொண்ட கர்நாடக அரசு இப்போது புதிய தந்திரத்தைக் கையில் எடுத்துள்ளது. மேகதாது அணை பாசனத்துக்கான அணை இல்லை; பெங்களூரு மாநகரத்துக்குத் தண்ணீர் வழங்குவதற்கான அணை என்பதுதான் அந்த உத்தியாகும். கர்நாடகத்தின் புதிய முதல்வராகப் பதவியேற்றுள்ள பசவராஜ் பொம்மை இந்தக் கருத்தை மீண்டும் கூறி உறுதி செய்திருக்கிறார். இதனடிப்படையில் தான் மத்திய அரசிடம் கர்நாடகம் அனுமதி கோரவுள்ளது.

தென்பெண்ணையாற்றின் துணை நதியான மார்க்கண்டேய நதியில் அணை கட்டுவதும் இரு மாநில ஒப்பந்தத்தின்படி சாத்தியமற்றதுதான். ஆனால், அந்த அணை குடிநீர் தேவைக்கானது என்று வாதிட்டு, அதற்கு கர்நாடகம் அனுமதி பெற்று அணையையும் கட்டி முடித்துவிட்டது.

அதேபோன்று, மேகதாது விவகாரத்தில் நடந்துவிடக் கூடாது. பெங்களூரு மாநகரத்துக்கு காவிரி ஆதாரத்திலிருந்து இப்போதே தண்ணீர் எடுக்கப்படுகிறது. அதை உச்ச நீதிமன்றமும் அனுமதித்துள்ளது. மேலும், பெங்களூரு மாநகரின் ஆண்டு குடிநீர் தேவை 4.75 டிஎம்சி மட்டும்தான். அதற்காக 70 டிஎம்சி கொள்ளளவுள்ள அணையைக் கட்டுவது நியாயமல்ல. இதை மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

மேகதாது அணை விவகாரத்தில் இனி வரும் நாட்களில் எந்த நேரமும் திருப்பங்கள் நிகழ வாய்ப்புண்டு. இதைக் கருத்தில் கொண்டு இந்த விஷயத்தில் தமிழக அரசு விழிப்புடன் செயல்பட வேண்டும். காவிரி விவகாரத்தில் தமிழக அரசுக்கு ஆலோசனைகளை வழங்க காவிரி தொழில்நுட்பக் குழு என்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டதைப் போல, மேகதாது விவகாரத்தை விழிப்புடன் கண்காணிக்கவும், ஆலோசனைகளை வழங்கவும் நீர் மேலாண்மையில் வல்லமை பெற்ற அதிகாரி ஒருவர் தலைமையில் குழு ஒன்றைத் தமிழக அரசு அமைக்க வேண்டும். இதை உடனடியாகச் செய்ய தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீர் மேலாண்மையில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என்பதற்காகத் தமிழக அரசின் பொதுப்பணித் துறையை இரண்டாகப் பிரித்து நீர்வளத்துறை என்ற புதிய துறை உருவாக்கப்பட்டது வரவேற்கத்தக்கது. ஆனால், அத்துறைக்கு இன்னும் தனிச் செயலாளர் நியமிக்கப்படாமல், பொதுப்பணித்துறைச் செயலாளரே இரு துறைகளையும் கவனித்துக் கொள்கிறார். இது புதிய அமைச்சகம் உருவாக்கப்பட்டதன் நோக்கத்தை நிறைவேற்றாது.

மேகதாது விவகாரம், நீர் மேலாண்மைத் திட்டங்கள் ஆகியவற்றின் கூடுதல் கவனம் செலுத்துவதற்கு வசதியாக நீர்வளத்துறைக்குத் தனிச் செயலாளர் ஒருவரைத் தமிழக அரசு நியமிக்க வேண்டும்".

இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x