Last Updated : 29 Jul, 2021 02:15 PM

 

Published : 29 Jul 2021 02:15 PM
Last Updated : 29 Jul 2021 02:15 PM

போலீஸ் அதிகாரி மீதான பாலியல் வழக்கு: நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்

பிரதிநிதித்துவப் படம்

விழுப்புரம்

டிஜிபி அந்தஸ்தில் உள்ள அதிகாரி மீதான பாலியல் வழக்கு குறித்து, விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர்.

தமிழகத்தில் எஸ்.பி.யாக உள்ள பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த பிப்ரவரி மாதம் அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்குப் பாதுகாப்பு அளிக்கும் பணியில் இருந்துள்ளார். அவரது மேலதிகாரியான சிறப்பு டிஜிபி ஒருவர், அவரது மாவட்டத்துக்கு வந்தபோது மரியாதை நிமித்தமாகச் சந்தித்தபோது, அவரை காரில் ஏறச்சொன்ன சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. அதுகுறித்து அந்தப் பெண் ஐபிஎஸ் அதிகாரி தமிழக சட்டம் - ஒழுங்கு காவல்துறையின் அப்போதைய டிஜிபி திரிபாதியிடமும், உள்துறைச் செயலாளரிடமும் புகார் அளித்தார்.

இந்நிலையில், பெண் ஐபிஎஸ் அதிகாரிக்குப் பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி குறித்து விசாரணை நடத்த கூடுதல் தலைமைச் செயலாளர் அந்தஸ்தில் உள்ள பெண் அதிகாரி தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது. இப்புகார் குறித்து, சிபிசிஐடி போலீஸார் விசாரிக்க அப்போதைய டிஜிபி திரிபாதி உத்தரவிட்டார்.

இதையடுத்து, சிறப்பு டிஜிபி பணியிடை நீக்கம் செய்யப்பட்ட நிலையில், அவர் மீது சிபிசிஐடி 3 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், இவ்வழக்கை சிபிஐக்கு மாற்றக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையில், அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர், "இந்த புகார் குறித்த விசாரணையை சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கண்காணித்து வருகிறார். இந்த விசாரணையில் ஏற்படும் முன்னேற்றங்கள் குறித்து அறிக்கையும் தாக்கல் செய்து வருகிறோம். மேலும், பெண் எஸ்.பி. அளித்த புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட விசாகா கமிட்டியின் அறிக்கையையும் அரசிடம் சமர்ப்பித்துள்ளோம்" என்றார்.

இந்த புகார் விசாரணை தொடர்பாகத் தனி நீதிபதி கண்காணித்து வருவதால், மேற்கொண்டு சிபிஐ விசாரணைக்கு மாற்ற அவசியம் இல்லை எனக் கூறி, வழக்கை முடித்து வைக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், இந்த உத்தரவு விசாரணையை எந்த விதத்திலும் பாதிக்காது என்றும் அவர்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.

இதற்கிடையே, ஏப்ரல் 23-ம் தேதி விழுப்புரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் 2-ல் நடுவர் முன்பு நேற்று (ஜூலை 28) பெண் அலுவலர் வாக்குமூலம் அளித்தார்.

இந்நிலையில், சிபிசிஐடி டிஎஸ்பி கோமதி இன்று (ஜூலை 29) விழுப்புரம் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சுமார் 400 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x