Published : 29 Jul 2021 11:36 AM
Last Updated : 29 Jul 2021 11:36 AM
கீழடி அள்ளித் தந்த மரபுச் செல்வங்களுக்குள் ஒரு வெள்ளிக் காசும் இப்போது இணைந்திருக்கின்றது என, தமிழ் - ஆட்சி மொழி, தமிழ்க் கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
திருப்புவனம் அருகே கீழடியில் 110 ஏக்கரில் தொல்லியல் மேடு அமைந்துள்ளது. இங்கு 2014 முதல் அகழாய்வு நடந்து வருகிறது. ஏற்கெனவே மூன்று கட்ட அகழாய்வு மத்திய தொல்லியல் துறை மூலமாகவும், நான்கு, ஐந்து, ஆறாம் கட்ட அகழாய்வு தமிழக தொல்லியல் துறை மூலமும் நடந்தன.
தற்போது 7-ம் கட்ட அகழாய்வு நடந்து வருகிறது. 6-ம் கட்ட அகழாய்வு மூலம் 14,535 தொல் பொருட்கள் கண்டறியப்பட்டன. இந்த அகழாய்வு மூலம் கீழடி நகர நாகரிகம் 2,600 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனத் தெரியவந்தது. இந்நிலையில், கீழடியில் வெள்ளிக் காசு ஒன்றும் கண்டறியப்பட்டுள்ளது.
இது தொடர்பாக, தமிழ்-ஆட்சி மொழி, தமிழ்க் கலாச்சாரம், தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு இன்று (ஜூலை 29) தன் முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
"கீழடியின் கொடை குறைவதில்லை!
கீழடி அள்ளித் தந்த மரபுச் செல்வங்களுக்குள் ஒரு வெள்ளிக் காசும் இப்போது இணைந்திருக்கின்றது.
'கங்கை நதிப்புறத்துக் கோதுமைப் பண்டம் காவிரி வெற்றிலைக்கு மாறு கொள்ளுவோம்' எனப் பாடிய பாரதியின் வணிகக் கனவினைப் பொது யுகத்துக்கு முன்னூற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரே நனவாக்கிக் காட்டிய கீழடித் தமிழ்ச் சமூகத்தின் வணிகத் தொடர்புகளுக்கான ஆதாரம் அது.
வெள்ளியிலான முத்திரைக் காசு (Punch Marked Coin) ஒன்று சில நாட்களுக்கு முன் கீழடி அகழாய்வுப் பண்பாட்டு அடுக்கில் 146 செ.மீ. ஆழத்தில் கிடைக்கப் பெற்றுள்ளது. இதன் வழியே இதன் காலம் மெளரியர்களின் காலத்துக்குச் சற்று முன்னதாக பொ.யு.மு. நான்காம் நூற்றாண்டின் நடுவிலானதாக இருக்கலாம் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
முன்புறம் சூரிய சந்திரர்கள், காளை, எருது, நாய் போன்ற குறியீடுகளும் பின்புறம் அரைவட்டம் மற்றும் 'ட' வடிவக் குறியீடுகளும் காணப்படுகின்றன.
2.20 கிராம் எடையுள்ள இந்த வெள்ளிக் காசு, வட புலத்தாருடன் நம் பழந்தமிழர் கொண்டிருந்த வணிகத் தொடர்புகளுக்கான மற்றுமொறு சான்று".
இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT