Published : 29 Jul 2021 09:56 AM
Last Updated : 29 Jul 2021 09:56 AM

ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டம்; வைகோ கேள்விக்கு மத்திய அமைச்சர் பதில்

வைகோ: கோப்புப்படம்

புதுடெல்லி

ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையேயான எரிவாயு குழாய் திட்டத்துக்கு தடை இன்மைச் சான்று தேவை இல்லை என, மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான வைகோ எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பதிலளித்துள்ளார்.

இது தொடர்பாக, வைகோ, எழுத்துப்பூர்வமாக எழுப்பிய கேள்விகள்:

"1. ராமநாதபுரத்தில் இருந்து தூத்துக்குடி வரை, அண்மையில் பிரதமர் தொடங்கி வைத்த இயற்கை எரிவாயு குழாய் திட்டம் குறித்த விவரங்கள்;

2. அந்தத் திட்டச் செலவுத் தொகை எவ்வளவு? 2021-22 ஆம் நிதி ஆண்டில், அதற்காக எவ்வளவு தொகை ஒதுக்கி இருக்கின்றீர்கள்?

3. இந்தத் திட்டத்தைத் தொடங்குவதற்கு முன்பு, சுற்றுச்சூழல் துறையில் அனுமதி பெறப்பட்டதா?

4. அவ்வாறு இருப்பின், அதுகுறித்த விவரங்கள்;

5. இந்தத் திட்டத்தால் பயன் பெறும் பகுதிகள் யாவை? அடுத்த மூன்று ஆண்டுகளில், எவ்வளவு வேலைவாய்ப்புகள் உருவாகும்?".

ஆகிய கேள்விகளை வைகோ எழுப்பியிருந்தார்.

மத்திய எண்ணெய், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தாலி: கோப்புப்படம்

இக்கேள்விகளுக்கு மத்திய எண்ணெய், இயற்கை எரிவாயு துறை இணை அமைச்சர் ராமேஸ்வர் தாலி அளித்த விளக்கம்:

"இந்தியன் ஆயில் நிறுவனத்தின், எண்ணூர் - திருவள்ளூர் - பெங்களூரு - புதுச்சேரி - நாகப்பட்டினம் - மதுரை - தூத்துக்குடி இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தின் (ETBNMTL) ஒரு பகுதியான, ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையே, 142 கிலோ மீட்டர் நீளம், 4 MMSCMD திறன் கொண்ட, இயற்கை எரிவாயு குழாய் திட்டத்தை, 17.02.2021 அன்று, பிரதமர் தொடங்கி வைத்தார்.

ராமநாதபுரம் - தூத்துக்குடி இடையேயான எரிவாயு குழாய் திட்டத்துக்கான மொத்தச் செலவு மதிப்பு 700 கோடி ரூபாய் ஆகும். 2021-22 ஆம் நிதி ஆண்டுக்கு, 12 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்தத் திட்டத்தைச் செயல்படுத்தும் இந்தியன் ஆயில் நிறுவனம், சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்காக, சுற்றுச்சூழல், காடுகள் மற்றும் காலநிலை மாறுபாடுகள் துறை அமைச்சகத்திடம் (Ministry of Environment, Forest and Climate Change - MoEF) திட்ட வரைவு வழங்கி இருக்கின்றார்கள். அதற்கான சட்டப்பிரிவுகளை, அமைச்சகம் ஆய்வு செய்தது; இந்தத் திட்டத்துக்கு தடை இன்மைச் சான்று தேவை இல்லை எனத் தீர்மானித்தது.

ராமநாதபுரம் - தூத்துக்குடி இயற்கை எரிவாயு திட்டத்தால், அந்த இரு மாவட்டங்களும் பயன்பெறும்; 30 பேருக்கு நேரடியாகவும், 75 பேருக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்புகள் கிடைக்கும்; தவிர, அடுத்த மூன்று ஆண்டுகளில், இந்தத் திட்டத்தால் பயன்பெறும் தொழிற்கூடங்கள், எரிவாயு வழங்குதல் பணிகளில் நிறைய வேலைவாய்ப்புகள் உருவாகும்".

இவ்வாறு அவர் பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x