Published : 28 Jul 2021 10:17 PM
Last Updated : 28 Jul 2021 10:17 PM

ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்லும் வகையில் தமிழக வீரர்களுக்கு உலகத்தர பயிற்சி: முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

"ஒலிம்பிக் மற்றும் சர்வதேசப் போட்டிகளில் தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று, பதக்கங்கள் வெல்லும் வகையில் உலகத் தரத்திலான பயிற்சி வழங்கிடவும், கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் வேண்டும்" என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆய்வுக் கூட்டத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தலைமைச் செயலகத்தில், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் செயல்பாடுகள், துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகளின் முன்னேற்றம், புதியதாக செயல்படுத்த உத்தேசிக்கப்பட்டுள்ள திட்டங்கள் ஆகியவை குறித்து ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், ஒலிம்பிக், சர்வதேச மற்றும் இந்திய அளவிலான போட்டிகளில் தமிழகத்தைச் சார்ந்த விளையாட்டு வீரர்கள் அதிக அளவில் பங்கேற்று, பதக்கங்கள் வென்று தமிழகத்திற்குப் பெருமை சேர்க்கும் வகையில், உலகத் தரத்திலான பயிற்சி வழங்கிடவும், விளையாட்டுக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திடவும் வேண்டும் என்று அறிவுறுத்திய முதல்வர், புதியதாக நடைமுறைப்படுத்த வேண்டிய விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்தும் ஆய்வுகள் மேற்கொண்டார்.

ஒவ்வொரு விளையாட்டிலும் திறமையும் ஆர்வமும் உள்ள கிராமப்புறத்தைச் சார்ந்த மாணவர்களைக் கண்டறிந்து அவர்களுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு, உறைவிடம் மற்றும் தேவையான விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதுடன், உயர் செயல்திறன் மிக்க பயிற்சி அளித்துப் பன்னாட்டுப் போட்டிகளில் பதக்கங்கள் வெல்வதற்கு மேற்கொள்ளப்படவேண்டிய வழிவகைகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

தமிழ்நாட்டு விளையாட்டு வீரர்களுக்கு உலகத் தரத்திலான பயிற்சி அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நான்கு ஒலிம்பிக் அகாடமிகள் ஏற்படுத்துதல், சென்னையில் பிரம்மாண்ட விளையாட்டு நகரம் அமைத்து அனைத்து வகையான போட்டிகளுக்கும் உயர்தரப் பயிற்சி அளித்தல், தமிழ்நாட்டின் அரசு வேலைவாய்ப்புகளில் விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டினை முழுமையாகச் செயல்படுத்துவதோடு, தமிழகத்தின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் விளையாட்டையும் சேர்த்துக் கொள்ளுதல், விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குதல் ஆகியவை குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

சர்வதேச அளவிலான போட்டிகளில் தமிழ்நாட்டைச் சார்ந்த விளையாட்டு வீரர் வீராங்கனைகள் அதிக அளவில் பங்குபெற்றுப் பதக்கங்கள் வென்று இந்தியாவில் மட்டுமல்லாது உலக அளவில் தமிழ்நாடு தலைசிறந்த மாநிலம் என்பதைப் பறைசாற்றுகின்ற வகையில் முன்னணி விளையாட்டு வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் விளையாட்டுத்துறை அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆய்வுக்கூட்டத்தில், சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, நிதித்துறைக் கூடுதல் தலைமைச் செயலாளர் ச.கிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x