Published : 28 Jul 2021 08:02 PM
Last Updated : 28 Jul 2021 08:02 PM
தென்காசி மாவட்டத்தில் விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் அடைக்கலப்பட்டணம் அருகே திறந்தவெளியில் வைக்கப்பட்டுள்ளன.
நெல் மூட்டைகளை பாதுகாப்பாக வைக்க போதிய வசதியுடன் கிட்டங்கி வசதி செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
நெல் அறுவடை காலங்களில் விவசாயிகள் இடைத்தரகர்களிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்து இழப்பை சந்திக்காமல் இருக்க அரசு சார்பில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படுகின்றன. அரசு நிர்ணயித்த விலைக்கு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு, அதற்குரிய பணம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் செலுத்தப்படுகிறது.
தென்காசி மாவட்டத்தில் நெல் மட்டும் சுமார் 45,000 ஹெக்டேர் பரப்பில் சாகுபடி செய்யப்படுகிறது. கடந்த ஆண்டில் ஆண்டில் பிசான பருவத்தில் சாகுபடி செய்யப்பட்ட நெல்லை கொள்முதல் செய்ய தென்காசி மாவட்டத்தில் சுமார் 20 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
ஒவ்வொரு கொள்முதல் நிலையங்கள் மூலமும் நாள் ஒன்றுக்கு ஆயிரம் மூட்டை வரை நெல் கொள்முதல் செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல் மாதம் வரை சுமார் 25 ஆயிரம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. இது முந்தைய ஆண்டை விட அதிகமாகும்.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல், பாதுகாப்பாக சேமித்து வைக்கப்படுகிறது. ஆலங்குளம் அருகே உள்ள அடைக்கலப்பட்டணத்தில் இருந்து பூலாங்குளம் செல்லும் சாலையில் உள்ள இடத்தில் நெல் சேமிப்பு மையம் உள்ளது. கட்டிட வசதி இல்லாததால் இந்த பகுதியில் திறந்தவெளியில் ஆயிரக்கணக்கான நெல் மூட்டைகள் மலை போல் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரி ஒருவர் கூறும்போது, “நெல்லை சேமித்து வைக்க போதிய கிட்டங்கி வசதி இல்லாததால்
திறந்தவெளியில் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மழையில் நெல் மூட்டைகள் பாதிக்காதவாறு தார்பாய்கள் போட்டு நெல் மூட்டைகள் மூடப்பட்டுள்ளன. மூடியே வைத்திருந்தால் நெல்லை அரிசியாக்கும்போது கருப்பு நிறமாக இருக்கும்.
எனவே, தினமும் காலையில் தார்பாய்களை அகற்றி, காற்றோட்டமாக வைக்கப்படும். மழை அறிகுறி இருந்தால் தார்பாய்கள் போட்டு மூடப்படும். தினமும் மாலையில் தார்பாய்கள் கொண்டு நெல் மூட்டைகள் மூடப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது” என்றார்.
விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை திறந்தவெளியில் வைப்பதில் பல்வேறு சிரமங்கள் இருப்பதால் பாதுகாப்பாக வைப்பதற்கு போதிய வசதியுடன் கிட்டங்கிகளை ஏற்படுத்த வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT