Published : 28 Jul 2021 03:16 PM
Last Updated : 28 Jul 2021 03:16 PM
தனியார் மருத்துவமனைகளில் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையைத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கிவைத்தார்.
இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 28) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை, காவேரி மருத்துவமனையில், இந்தியத் தொழில் கூட்டமைப்பு மற்றும் தனியார் மருத்துவமனைகள் இணைந்து, தனியார் நிறுவனங்கள் மற்றும் தனியார் மருத்துவமனைகளின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியின் (Corporate Social Responsibility Fund) மூலம் நடத்தும் இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் சேவையைத் தொடங்கி வைத்தார். மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்குச் சான்றிதழ்களை வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, முதல்வரிடம், இலவச கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிக்கு இந்தியத் தொழில் கூட்டமைப்புத் தலைவர் சந்திரகுமார், இந்தியத் தொழில் கூட்டமைப்பின் கூட்டாண்மை சமூகப் பங்களிப்பு நிதியிலிருந்து 2 கோடியே 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையும், அடையாறு ஆனந்தபவன் சார்பில் அதன் நிர்வாக இயக்குநர் கே.டி.சீனிவாச ராஜா 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையும் வழங்கினார்.
கரோனா தொற்றைக் கட்டுப்படுத்துவதற்குப் பொதுமக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட வேண்டியதன் அவசியத்தை முதல்வர் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இது தொடர்பாகப் பல்வேறு விழிப்புணர்வுப் பணிகளும் அரசின் சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மாநிலத்தில் இதுவரை அரசு மற்றும் தனியார் தடுப்பூசி மையங்களின் மூலம் 2,15,17,446 பயனாளிகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது".
இவ்வாறு தமிழக அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT