Published : 28 Jul 2021 01:24 PM
Last Updated : 28 Jul 2021 01:24 PM
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளை ஆகஸ்ட் 9-ம் தேதிக்கு சென்னை உயர் நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
தேனி மாவட்டம், போடி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தின் வெற்றியைச் செல்லாது என அறிவிக்கக் கோரி, வாக்காளர் மிலானி என்பவர் தேர்தல் வழக்குத் தொடர்ந்துள்ளார்.
அதேபோல, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற அக்கட்சி இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.
இந்தத் தேர்தல் வழக்குகள், நீதிபதி பாரதிதாசன் முன்பு இன்று (ஜூலை 28) விசாரணைக்கு வந்தன. பன்னீர்செல்வத்துக்கு எதிரான வழக்கில், சொத்து மதிப்பு குறைத்துக் காட்டப்பட்டுள்ளதாகக் கூறுவதற்கான ஆவணங்களைத் தாக்கல் செய்ய மனுதாரர் மிலானி தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்தார்.
இதேபோல, உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கில், வைப்புத்தொகை செலுத்தாதது குறித்து விளக்கமளிக்க மனுதாரர் எம்.எல்.ரவிக்கு உத்தரவிட்ட நீதிபதி பாரதிதாசன், விசாரணையை ஆகஸ்ட் 9-ம் தேதிக்குத் தள்ளிவைத்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT