Published : 18 Feb 2016 10:48 AM
Last Updated : 18 Feb 2016 10:48 AM
படைப்புக் கலைப் பிரிவில் ஓவியத்துக்காக மத்திய அரசின் பாலஸ்ரீ விருதைப் பெற்றுள்ளார் திருச்சி ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர் ஏ.பிரசாத்.
ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார் ஏ.பிரசாத். இவர் 2013-ம் ஆண்டுக்கான மத்திய அரசின் பாலஸ்ரீ விருதை கடந்த பிப்ரவரி 3-ம் தேதி டெல்லியில் நடைபெற்ற விழாவில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஸ்மிருதி இரானியிடமிருந்து பெற்றுத் திரும்பியுள்ளார்.
தந்தை ஓவிய ஆசிரியர்
படைப்புக் கலைப் பிரிவில் (ஓவியம்) தமிழகத்தில் இருந்து பாலஸ்ரீ விருது பெற்ற இருவரில் ஒருவர் பிரசாத் என்பது குறிப்பிடத்தக்கது. இவரது தந்தை அறிவழகன் ஸ்ரீரங்கத்தில் ஓவியராகப் பணியாற்றி வருகிறார். தாய் சாந்தி மற்றும் ஒரு தங்கை உள்ளார்.
தனது தந்தை ஓவியம் வரைவதைப் பார்த்து சிறுவயது முதலே பென்சிலை எடுத்து கிறுக்கிக் கொண்டிருந்த பிரசாத், ஆர்வ மிகுதியால் படிப்படியாக ஓவியத்தைக் கற்றுக் கொண்டு சிறப்பாக வரைந்து பள்ளி அளவில் தொடங்கி, மாவட்ட, மாநில, தேசிய அளவில் பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பல்வேறு விருதுகளையும், பரிசுகள், சான்றிதழ்களையும் பெற்றுள்ளார்.
இதுகுறித்து மாணவர் பிரசாத் ‘தி இந்து’விடம் கூறியதாவது: பல்வேறு துறைகளில் சாதனை படைப்பவர்களுக்கு வழங்கப்படும் பத்மஸ்ரீ விருது போன்ற பெருமையை உடையது சிறுவர்களுக்கு வழங்கப்படும் பாலஸ்ரீ விருது. வீடு முழுவதும் சான்றிதழ்களும், கோப்பைகளும் இருந்தாலும், இந்த விருதைப் பெற வேண்டும் என்பதற்காக 4-ம் வகுப்பு படித்த போதிருந்தே முயற்சி செய்து கொண்டிருந்தேன். 10-ம் வகுப்பு படிக்கும்போது இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டேன். எனக்கு மிகவும் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் உள்ளது.
தற்போது, பென்சில் ஷேடிங், வாட்டர் கலர், அக்ரலிக் பெயின்டிங், சுவர் ஓவியம், களிமண் சிற்பங்கள் செய்தல், ஆயில் பெயின்டிங் என பல்வேறு முறைகளில் நான் ஓவியங்களை வரைந்து வருகிறேன். இன்னும் நிறைய சாதிக்க வேண்டும். பிளஸ் 2 முடித்துவிட்டு கட்டிட எழில் கலைஞராக வர வேண்டும் என்பதுதான் எனது லட்சியம் என்றார் பிரசாத். இவரை ஊக்குவிக்கும் வகையில் ஸ்ரீரங்கம் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் தலைமையாசிரியர் வெங்கடேஷ் மாணவர் பிரசாத்துக்கு பரிசளித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT