Published : 19 Feb 2016 09:01 AM
Last Updated : 19 Feb 2016 09:01 AM
அதிமுகவில் இணைத்துக் கொள்ள வேண்டி தேமுதிக அதிருப்தி எம்.எல்.ஏ-க்கள் அதிமுக தலைமை யிடம் தொடர்ந்து வலியுறுத்தி காத்தி ருக்கின்றனர். ஆனால், அதிமுக தரப்பில் இருந்து பதில் ஏதும் வராததால் அவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.
கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின் போது அதிமுகவுடன் கூட்டணி வைத்த தேமுதிக 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், வெற்றி பெற்ற ஓராண்டுக்குள்ளாகவே, மதுரை மத்திய தொகுதி எம்எல்ஏ சுந்தரராஜன் மற்றும் விஜயகாந்த் ரசிகர் மன்றத்தின் தொடக்கக் கால உறுப்பினராக இருந்து திட்டக்குடி எம்.எல்.ஏ-வாக ஆன தமிழழகன் ஆகி யோர் முதல்வரை 2013-ம் ஆண்டு சந்தித்தனர்.
தொகுதி பிரச்சினைக்காக முதல்வரை சந்தித்ததாக கூறிய அவர்கள், தேமுதிக தலை மையை விமர்சித்தனர். அன்று முதல் அவர்கள் தேமுதிக அதி ருப்தி எம்.எல்.ஏ-க்களாகவே இருந்து வருகின்றனர். அவர் களது பாணியிலேயே, பேராவூரணி அருண்பாண்டியன், ராதாபுரம் மைக்கேல் ராயப்பன், சேந்தமங்கலம் சாந்தி, செங்கம் சுரேஷ்குமார், விருதுநகர் மாஃபா பாண்டியராஜன் என்று அடுத் தடுத்து எம்.எல்-ஏக்கள் முதல்வரைச் சந்தித்து அதிமுக ஆதரவாளராக மாறினர். திருத்தணி எம்.எல்.ஏ. அருண் சுப்ரமணியமும் சென்றாண்டு முதல்வரைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவாக செயல்பட்டு வருகிறார்.
தேமுதிக அதிருப்தி எம்.எல்-ஏக்கள் பேரவையில் பேச வாய்ப்பு கிடைக்கும்போது எல்லாம், ‘தங்களது பிராண்ட் எப்போது மாறும்’ என்று கேள்வி எழுப்பிவந்தனர். இந்தச் சூழலில், சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்குவதால், எப்படியாவது அதிமுகவில் இணைந்து சீட் பெற வேண்டும் என்பதில் உறுதி யாக உள்ளனர். இதற்காக அதிமுக தலை மையின் பதிலுக்காக அவர்கள் காத்தி ருக்கின்றனர். இதுபற்றி விருதுநகர் எம்.எல்.ஏ-வான மாஃபா பாண்டிய ராஜனிடம் கேட்டபோது, “அதிமுகவில் இணைய நான் ஆர்வமாக உள்ளேன். அதிமுக தலைமையும் சேர்த்துக்கொள்ள உள்ளது. ஆனால், எவ்வளவு சீக்கிரத்தில் சேர்த்துக் கொள்வார்கள் என்று தெரியவில்லை. விருதுநகர் மக்களவை மற்றும் சட்டப் பேரவைத் தேர்தலில் அதிக வாக்கு கள் பெற்றிருக்கிறேன். அதற்காக நான் எதையும் வலியுறுத்த வில்லை. முதல்வர் முடிவுக்கு கட்டுப்படுவேன்” என்றார்.
இது தொடர்பாக திட்டக்குடி சட்டப் பேரவை உறுப்பினர் தமிழழகன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “அதிமுக வில் இணைய வேண்டி மனு அளித்துள் ளேன். முதல்வரைச் சந்தித்ததன் பலனாக கடந்த 4 ஆண்டுகளில் எனது தொகுதிக்கு நிறைய செய்திருக்கிறேன். தொடர்ந்து தொகுதிக்காக உழைக்க விரும்புகிறேன். முதல்வர் மனது வைத்தால் அது சாத்திய மாகும். இல்லையெனில், அதிமுக வெற்றிக்குப் பாடுபடுவேன்” என்றார்.
இதேபோல் சேந்தமங்கலம் எம்.எல்.ஏ. சாந்தி கூறும்போது, “அதிமுக வில் சேர வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை விடுத்துள்ளேன். நேரம் வரும்போது சொல்வதாக முதல்வர் கூறினார். முதல்வரின் முடிவுக்காக காத்திருக்கிறேன்” என்றார்.
பேராவூரணி எம்.எல்.ஏ-வான நடிகர் அருண் பாண்டியன் ‘தி இந்து’விடம் கூறும்போது, “ அதிமுகவில் இணைய வேண்டும் என்ற விண்ணப்பத்தை அதிமுக தலைமைக்கு தெரியப்படுத்தி யுள்ளோம். நடப்பு சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் முடிந்த தும், இதுபற்றி பரிசீலிப்பதாக கூறியுள்ளனர். அதை வைத்து தான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்க உள்ளேன்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT