Published : 28 Jul 2021 03:18 AM
Last Updated : 28 Jul 2021 03:18 AM
11-வது உலகத்தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த வேண்டும் என அமைச்சர்கள், உலகத் தமிழ் அமைப்புகளிடம் ஆதரவு திரட்டும் முயற்சியில் சமூக ஆர்வலர்கள் இறங்கியுள்ளனர்.
தமிழ் மொழியின் வளர்ச்சிக்கான திட்டங்களை வகுக்கவும், உலகெங்கும் வாழும் தமிழறிஞர்களை ஒன்றிணைக்கும் வகையிலும் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என 1964-ம் ஆண்டு டெல்லியில் தொடங்கப்பட்ட உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் முடிவு செய்தது. இதற்கு தமிழக அரசும் முழுமையான ஒத்துழைப்பை வழங்கியது.
இதுவரை நடந்த மாநாடுகள்
இதன்படி முதல் உலகத் தமிழ் மாநாடு 1966-ம் ஆண்டு மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடத்தப்பட்டது. பின்னர் 2-வது மாநாடு 1968-ல் சென்னையிலும், 3-வது மாநாடு 1970-ல் பிரான்ஸ் தலைநகர் பாரிஸ் நகரிலும், 4-வது மாநாடு 1974-ல் இலங்கை யாழ்பாணத்திலும், 5-வது மாநாடு 1981-ல் மதுரையிலும், 6-வது மாநாடு 1987-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும், 7-வது மாநாடு மொரீசியஸ் நாட்டிலுள்ள போர்ட்லூயிஸ் நகரிலும், 8-வது மாநாடு 1995-ம் ஆண்டு தஞ்சாவூரிலும், 9-வது மாநாடு 2015-ம் ஆண்டு மலேசிய தலைநகர் கோலாலம்பூரிலும், 10-வது மாநாடு 2019-ம் ஆண்டு அமெரிக்காவிலுள்ள சிகாகோ நகரிலும் நடத்தப்பட்டன.
கோவையில் செம்மொழி மாநாடு
மறைந்த திமுக தலைவர் கருணாநிதி முதல்வராக இருந்தபோது கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் 9-வது உலகத் தமிழ் மாநாட்டை நடத்த திட்டமிட்டார்.
ஆனால் அதுதொடர்பாக சில சிக்கல்கள் எழுந்ததன் காரணமாக, அது உலகத் தமிழ் செம்மொழி மாநாடு என மாற்றப்பட்டு, நடத்தப்பட்டது.
இதன்மூலம் 1995-ம் ஆண்டு தஞ்சையில் நடைபெற்ற உலகத்தமிழ் மாநாட்டிலிருந்து கால் நூற்றாண்டுக்கு மேலாகியும்கூட தமிழகத்தில் இதுவரை உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படாத சூழல் நிலவி வருகிறது.
இதற்கிடையே, தற்போது திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில், தமிழகத்தில் உலகத் தமிழ் மாநாட்டை நடத்துவது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அண்மையில் தெரிவித்திருந்தார்.
திருச்சியில் நடத்த தீவிரம்
இந்நிலையில் அடுத்து வரக்கூடிய 11-வது உலகத் தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்த சமூக ஆர்வலர்கள் சிலர் முயற்சி மேற்கொண்டுள்ளனர். அதன்படி, மாநில நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவிடம் திருச்சி மாநகர மேம்பாட்டு ஆர்வலர்கள் குழுவைச் சேர்ந்த ஷ்யாம் சுந்தர், ஜெகன் உள்ளிட்டோர் நேற்று முன்தினம் மனு அளித்தனர். இதுதொடர்பாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் கலந்து பேசிய பின்னர் முதல்வரின் கவனத்துக்கு கொண்டு செல்வதாக அமைச்சர் நேரு உறுதியளித்தார். மேலும், திருச்சியைச் சேர்ந்த மற்றொரு அமைச்சரான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, மத்திய மண்டலத்திலுள்ள அமைச்சர்களான எஸ்.ரகுபதி, வி.செந்தில்பாலாஜி, சிவ.வீ.மெய்யநாதன், எஸ்.எஸ் சிவசங்கர் மற்றும் எம்எல்ஏக்களைச் சந்தித்து இக்கோரிக்கையை வலியுறுத்தும் முயற்சியில் இக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
முதல்வரிடம் மனு அளிக்க முடிவு
இதுகுறித்து அவர்கள் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறும்போது, ‘‘ஏற்கெனவே சென்னை, மதுரை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் உலகத் தமிழ் மாநாடுகள் நடத்தப்பட்டுள்ள நிலையில், 11-வது மாநாட்டை பழமையும், புதுமையும் நிறைந்த தொன்மையான நகரமான திருச்சியில் நடத்த வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் தமிழறிஞர்கள் இங்கு வருவதற்கேற்ப சாலை, ரயில், விமான போக்குவரத்து வசதிகளும் உள்ளன.
எனவே, இம்மாநாட்டை திருச்சியில் நடத்த வலியுறுத்தி தமிழக அமைச்சர்கள் மற்றும் தமிழர்கள் அதிகம் வசிக்கக்கூடிய கனடா, அமெரிக்கா, ஜப்பான், கம்போடியா, இங்கிலாந்து மற்றும் வளைகுடா நாடுகளில் உள்ள தமிழ் சங்கங்களிடம் ஆதரவு திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம். முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்து மனு அளிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது’’ என்றனர்.
திருச்சிக்கு பெருமை சேர்க்கும்
இதுகுறித்து தாய்லாந்து தமிழ் சங்கத்தின் தலைவரான சரவணன் அழகப்பன் கூறும்போது, ‘‘11-வது உலகத்தமிழ் மாநாட்டை திருச்சியில் நடத்தினால், அந்த நகருக்கு பெருமை சேர்ப்பதாக இருக்கும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT