Last Updated : 27 Jul, 2021 09:20 PM

 

Published : 27 Jul 2021 09:20 PM
Last Updated : 27 Jul 2021 09:20 PM

கோவை சாலைகளில் வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவுகள் மாற்றம்: மீறினால் அபராதம்; காவல்துறை எச்சரிக்கை

கோவை மாநகரில், வாகனங்கள் இயக்கும் வேக அளவு மாற்றப்பட்டது தொடர்பாக, மாநகர காவல்துறை சமுதாயக்கூடத்தில் நடந்த பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் மாநகர காவல்துறையின் துணை ஆணையர் (போக்குவரத்து) எஸ்.ஆர்.செந்தில்குமார்.|  படம் : ஜெ.மனோகரன்.

கோவை

கோவையில் உள்ள சாலைகளில், வாகனங்களின் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவுகள் மாற்றப்பட்டுள்ளன. இவை நாளை (ஜூலை 28) முதல் பயன்பாட்டுக்கு வருகின்றன. வேக அளவுகளை மீறினால், தொடர்புடைய வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கோவையில், பொதுப்போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் வாகனங்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரிக்கிறது. சில சாலைகளை தவிர்த்து, பெரும்பாலான சாலைகள் விரிவுபடுத்தப்படாமல், முன்பு இருந்தே அளவில் இருப்பதால், அதிகரித்து வரும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப சாலை வசதி இல்லாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

சாலை விபத்துகளும் உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. சாலை விபத்துகள், போக்குவரத்து நெரிசல்களை தவிர்க்க, காவல்துறையினர் முக்கிய இடங்களில் சிக்னல்களை அமைத்தும், வாகனத் தணிக்கை மேற்கொள்கின்றனர். விதிமீறும் வாகன ஒட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கின்றனர். தவிர, மாவட்டத்தில் உள்ள சாலைகளில் வாகனங்களை, நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் தான் இயக்க வேண்டும் என காவல்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்நிலையில், மாவட்டத்தில் விபத்துகளைத் தடுக்க, வாகனங்களின் வேக அளவை தற்போதைய சூழலுக்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும் என சமூக செயல்பாட்டாளர்கள், மாவட்ட நிர்வாகத்திடமும், காவல்துறை நிர்வாகத்திடமும் தொடர்ந்து வலியுறுத்தினர். இதைத் தொடர்ந்து, ஆட்சியர் ஜி.எஸ்.சமீரனின் உத்தரவின் பேரில், மாவட்டத்தில் உள்ள பல்வேறு சாலைகளில் வேக அளவு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது.

வேக அளவுகள் மாற்றம்

அதன்படி, கோவை மாநகரில் காந்திபுரம் முதல் கணபதி வரையிலும், நூறடி சாலை, கிராஸ்கட் சாலை, பாரதியார் சாலை, சுக்கிரவார்பேட்டை முதல் மேம்பாலம் வரை, வைசியாள் வீதி முதல் செல்வபுரம் வரை என மேற்கண்ட வழித்தடங்களில் வாகனங்களை, மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகரின் மீதமுள்ள பகுதிகளில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்க உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்டக் காவல்துறைக்குட்பட்ட சோமையனூர் - தண்ணீர் பந்தல் சாலை, டிவிஎஸ் நகர் - கணுவாய் சாலை, ராக்கிபாளையம் பிரிவு முதல் தொப்பம்ப்பட்டி பிரிவு, மத்தம்பாளையம் கோட்டைப் பிரிவு, காரமடை டீச்சர்ஸ் காலனி, காந்தி நகர், குட்டையூர், தென் திருப்பதி நால் ரோடு, ஆலாங்கொம்பு - புங்கம்பாளையம் சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. கிணத்துக்கடவு தாமரைக் குளம் பாலம் முதல் பதி சாலை, கோயில்பாளையம் முதல் சேரன்நகர், பாலத்துறை ஜங்ஷன் முதல் எல் அன்ட் டி பைபாஸ் சாலை உள்ளிட்ட இடங்களில் 30 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்கள் இயக்க அனுமதிக்கப்பட்டுள்ளன.

நாளை முதல் அபராதம்

மாநகர போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் கூறும்போது,‘‘ மாநகரில் வேக அளவு மாற்றப்பட்டது தொடர்பான, அறிவிப்பு பலகை பொருத்தும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது. வாகன ஓட்டுநர்களுக்கும் இதுதொடர்பாக அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இன்று முதல் மாற்றப்பட்ட வேக அளவுகள் மாநகரில் முழுமையாக நடைமுறைக்கு வரும். இந்த வேக அளவுகளை தாண்டி வாகனங்களை இயக்கும் வாகன ஓட்டுநர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்,’’ என்றனர்.

துணை ஆணையர்

கோவை மாநகரில், வாகனங்கள் இயக்கும் வேக அளவு மாற்றப்பட்டது தொடர்பாக, மாநகர காவல்துறை சமுதாயக்கூடத்தில் இன்று (ஜூலை 27) பேருந்து மற்றும் லாரி உரிமையாளர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் மாநகர காவல்துறையின் துணை ஆணையர் (போக்குவரத்து) எஸ்.ஆர்.செந்தில்குமார் பங்கேற்று வேக அளவு மாற்றப்பட்டது தொடர்பாக எடுத்துக் கூறி, அதை பின்பற்ற வலியுறுத்தினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x