Last Updated : 12 Feb, 2016 11:15 AM

 

Published : 12 Feb 2016 11:15 AM
Last Updated : 12 Feb 2016 11:15 AM

மகாமகப் பெருவிழா: குளத்தில் அதிக ஒளி தரும் மின் விளக்குகள் - 4 உயர் மின் கோபுரங்களில் அமைப்பு

கும்பகோணம் மகாமக குளத்தில் பக்தர்கள் இரவு நேரத்திலும் புனித நீராடும் வகையில் 240 மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

கும்பகோணத்தில் மகாமகத் திருவிழா நாளை (பிப்ரவரி 13) தொடங்குகிறது. வரும் 22-ம் தேதி வரை நடைபெறும் இந்த விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். மகாமக குளத்தில் நாளை முதல் பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்பட உள்ளனர்.

பக்தர்கள் குளத்தின் கிழக்கு படித்துறையில் இறங்கி குளித்துவிட்டு மேற்கு படித்துறை வழியாக மேலே ஏறிச் செல்ல வேண்டும். தென் பகுதியில் முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள், வடபகுதியில் முக்கியப் பிரமுகர்கள், மையப் பகுதியில் பொதுமக்கள் நீராடும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மேலும், பக்தர்கள் மீது தண்ணீர் தெளிப்பதற்காக 7 இடங்களில் ஸ்பிரிங்லர்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மகாமகம் தொடர்புடைய சிவன் கோயில்களில் நாளை (பிப்ரவரி 13) பகல் 12 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. தொடர்ந்து, மகாமக குளத்தில் புனித நீராடலாம். வரும் 14-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை மகாமக குளத்தில் புனித நீராட பக்தர்கள் அனுமதிக்கப்படுவர்.

இரவு நேரத்தில் பக்தர்கள் புனித நீராட வசதியாக குளத்தின் நான்கு கரைகளிலும் உள்ள 4 உயர் மின் கோபுர கம்பங்களில் அதிக வெளிச்சம் தரும் மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. ஒவ்வொரு கம்பத்திலும் 60 விளக்குகள் வீதம் மொத்தம் 240 மின் விளக்குகள் பொருத்தப்பட்டு, அருகில் உள்ள 4 டிரான்ஸ்பார்மர்களிலிருந்து மின் விநியோகம் செய்யப்படுகிறது. மேலும், தற்காலிக பேருந்து நிலையங்களிலிருந்து மகாமக குளத்துக்கு வரும் சாலைகளிலும் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன

இரவைப் பகலாக்கும் வகையில் கும்பகோணம் மகாமக குளக்கரையில் அமைக்கப்பட்டுள்ள, அதிக ஒளி தரும் மின் விளக்குகள். | படம்: வி.சுந்தர்ராஜ்



துறவிகள் ஊர்வலம் ஒத்திகை

அகில பாரத துறவியர் மாநாடு வரும் 18-ம் தேதி கும்பகோணம் கோவிந்தபுரத்தில் நடைபெறவுள்ளது. மேலும், துறவிகள் ஊர்வலமும் நடைபெற உள்ளது. இதில் நூற்றுக்கணக்கான துறவிகள் பங்கேற்கின்றனர். இந்நிலையில், நேற்று துறவிகள் ஊர்வலம் ஒத்திகை நடைபெற்றது. சாரங்கபாணி தீர்த்தவாரி மண்டபத்திலிருந்து சுவாமி ராமானந்தா தலைமையில் 20 துறவிகள் ஊர்வலமாகப் புறப்பட்டு மகாமக குளத்துக்கு வந்தனர்.

மகாமக விழாவில் பங்கேற்பதற்காக இலங்கை உள்ளிட்ட நாடுகளிலிருந்து துறவிகள் வந்துள்ளனர். மேலும், 50 நாக சாதுக்கள் துறவியர் மாநாட்டிலும், தீர்த்தவாரியிலும் பங்கேற்க உள்ளதாக மாநாட்டு செய்தி தொடர்பாளர் சத்தியநாராயணன் தெரிவித்துள்ளார்.

கும்பகோணத்தில் நேற்று ஊர்வல ஒத்திகையில் ஈடுபட்ட துறவிகள். | படம்: வி.சுந்தர்ராஜ்



அறநிலையத் துறை அமைச்சர் ஆய்வு

மகாமகப் பணிகள் தொடர்பாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். மகாமக குளம், பொற்றாமரைக் குளம், காவிரி ஆற்றின் படித்துறைகள், காசி விஸ்வநாதர் கோயில் உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர், அதிகாரிகளுக்கு பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார்.



சிவன் கோயில்களில் நாளை கொடியேற்றம்

மகாமக விழாவையொட்டி நாளை (பிப்ரவரி 13) கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர், காசி விஸ்வநாதர், நாகேஸ்வரர், அபிமுகேஸ்வரர், காளஹஸ்தீஸ்வரர், வியாழசோமேஸ்வரர் கோயில்களில் பகல் 12 மணி முதல் 1 மணிக்குள் 10 நாள் உற்சவக் கொடியேற்றம் நடைபெறவுள்ளது.

இதர சிவன் கோயில்களான கவுதமேஸ்வரர், ஏகாம்பரேஸ்வரர், பாணபுரீஸ்வரர், ஆதிகம்பட்டவிஸ்வநாதர், கோடீஸ்வரர், அமிர்தகலசநாதர் கோயில்களில் 22-ம் தேதி மட்டும் ஒரு நாள் உற்சவம் நடைபெறவுள்ளது. வைணவத் தலங்களான சக்கரபாணிகோயில், சாரங்கபாணி கோயில், ராம சுவாமி கோயில், ராஜகோபால சுவாமி கோயில், ஆதிவராக பெருமாள் கோயில்களில் 14-ம் தேதி காலை 8.45 மணி முதல் 9.45 மணிக்குள் 10 நாள் உற்வசம் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.



மகாமக குளத்தில் குளோரின் பவுடர் தெளிப்பு

மகாமக குளத்தில் உள்ள தண்ணீரில் சுகாதாரத் துறை மூலம் அவ்வப்போது குளோரின் பவுடர் தெளிக்கப்படுகிறது. மேலும், அவ்வப்போது தண்ணீரின் மாதிரி எடுத்து பரிசோதனை செய்யப்படுகிறது. சுகாதாரத் துறை துணை இயக்குநர் சுப்பிரமணியன் தலைமையில் 25 பணியாளர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.



800 ஆசிரியர்கள் வருகை

போலீஸாருடன் இணைந்து பாதுகாப்பு பணியில் ஈடுபடவும், கோயில்களில் பக்தர்கள் கூட்டத்தை ஒழுங்குபடுத்தவும் தமிழகம் முழுவதிலுமிருந்து சாரண ஆசிரியர்கள், என்எஸ்எஸ் அலுவலர்கள், ஜேஆர்சி அமைப்பாளர்கள் என 800 ஆசிரியர்கள் வருகின்றனர். இவர்கள் சுழற்சி அடிப்படையில் வரும் 19-ம் தேதி முதல் 22-ம் தேதி வரை பணியாற்ற உள்ளனர்.



இன்று அமிர்த நீர் ஊர்வலம்

மகாமக விழாவின் தொடக்கமாக கும்பகோணம் ஆதிகும்பேஸ்வரர் கோயிலில் பூஜை செய்யப்பட்ட புனித நீர் (அமிர்த நீர்) கண்ணாடி பல்லக்கில் வைக்கப்பட்டு இன்று காலை 8.30 மணிக்கு மகாமக குளத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. இந்த நீரை குளத்தில் கலந்து, மகாமக குளத்தின் நீரை புனித நீராக மாற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர், 20 தீர்த்த கிணறுகளிலிருந்து 108 குடங்களில் புனித நீர் கொண்டு செல்லப்பட்டு, மகாமக தீர்த்த பிரசாதம் தயாரிக்க உள்ளதாக அறநிலையத் துறை இணை ஆணையர் கஜேந்திரன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x