Published : 27 Jul 2021 10:20 AM
Last Updated : 27 Jul 2021 10:20 AM
அரியலூர் மாவட்டம் திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகளும், சமூக ஆர்வலர்களும் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தின் முக்கியப் பகுதியாக திருமானூர் உள்ளது. இந்தப் பகுதியில் நெல், கரும்பு, பருத்தி, மக்காச்சோளம், கம்பு, ராகி உள்ளிட்ட தானியப் பயிர்கள் ஆண்டுதோறும் சாகுபடி செய்யப்படுகின்றன. குறிப்பாக திருமானூர் பகுதி டெல்டாவாக இருப்பதால் சுமார் 10,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை நெல் சாகுபடி செய்யப்படுகிறது. அதேபோல், சுமார் 50,000 ஏக்கர் பரப்பளவில் சம்பா நெல் சாகுபடியும் செய்யப்படுகிறது. பருத்தி, மக்காச்சோளம், கரும்பு உள்ளிட்ட பயிர்கள் ஆண்டுதோறும் சுமார் 1 லட்சம் ஏக்கர் அளவில் பயிரிடப்படுகிறது.
இந்நிலையில், நெல் அறுவடை முடிந்து வைக்கோல்கள் வாகனங்களில் வயல்களிலிருந்து வீடுகளுக்குக் கொண்டு வரும்போது, மின்கம்பிகள் உரசி அவ்வப்போது தீ விபத்துகள் ஏற்படுவது ஆண்டுதோறும் நடைபெற்று வருகிறது. இதனால் விவசாயிகளுக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது. அதேபோல், கரும்பு வயல்களுக்கு மேலே செல்லும் மின்கம்பிகளில் அவ்வப்போது ஏற்படும் உராய்வின் காரணமாக கரும்பு வயல்களில் தீப்பொறி பட்டு பயிர்கள் எரிந்து நாசமாவது தொடர் சம்பவமாக உள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் கொள்ளிடத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கின்போது, குளிக்கும் நபர்கள், கால்நடைகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்படுவதும் அவ்வப்போது நடக்கிறது. இதனால் உயிர்பலியும் ஏற்படுகிறது.
எனவே, தீ விபத்து மற்றும் வெள்ளப் பெருக்கு போன்ற பேரிடர்க் காலங்களில் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து மக்கள் மற்றும் கால்நடைகளைப் பாதுகாக்க திருமானூரில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்த வேண்டும் என்பது அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.
தற்போது சுமார் 24 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரியலூரிலிருந்து தீயணைப்பு வாகனம் வந்து சேர்வதற்குள் பெரும் சேதம் ஏற்பட்டு விடுகிறது. மேலும், திருமானூரின் எல்லைப் பகுதியான தூத்தூர், திருமானூரிலிருந்து கிழக்கே சுமார் 15 கி.மீ. தூரத்திலும், மேற்கே குலமாணிக்கம் 15 கி.மீ. தூரத்திலும் உள்ளதால், அரியலூரிலிருந்து திருமானூர் வந்து மேற்கண்ட பகுதிகளுக்குத் தீயணைப்பு வாகனம் செல்லக் கூடுதல் நேரம் ஆவதால், அனைத்தும் எரிந்து சாம்பலாகும் நிலை ஏற்படுகிறது. எனவே, திருமானூரில் தீயணைப்பு நிலையம் ஏற்படுத்தித் தரவேண்டும் என்பது விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்களின் முக்கியக் கோரிக்கையாக உள்ளது.
திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைப்பது குறித்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கரிடம் கேட்டபோது, முயற்சி எடுக்கப்படும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT