Last Updated : 05 Feb, 2016 04:27 PM

 

Published : 05 Feb 2016 04:27 PM
Last Updated : 05 Feb 2016 04:27 PM

மீம் பாணியில் விழிப்புணர்வு: ட்விட்டரில் தெறிக்க விடும் தமிழக தேர்தல் ஆணையம்

இன்றைய காலகட்டத்தில், சினிமா ரிலீஸுக்கு மட்டுமல்ல எல்லாத்துக்குமே ஒரு புரோமஷன் தேவைப்படுகிறது. தேர்தல் மட்டும் அதற்கு விதிவிலக்கா என்ன?

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் களம் பரபரப்பாகிக் கொண்டிருக்கும் வேளையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வாக்களித்தல், வாக்களிக்க இளைஞர்களை ஊக்குவித்தல், ஓட்டுக்கு பணம் தவிர்த்தல், வாக்காளர் பட்டியலில் பெயர் சரிபார்த்தல் என பல்வேறு நடவடிக்கைகள் குறித்த சுவாரஸ் பதிவுகள் இடம் பெற்றுள்ளன.

அவர்கள் கையாண்டுள்ள சினிமா பாணியிலேயே சொல்ல வேண்டுமென்றால் தெறிக்க விட்டிருக்கிறார்கள். #TN100percent என்ற ஹேஷ்டேகின் கீழ் இத்தகைய விழிப்புணர்வு பிரச்சார பகிர்வுகளை டிரெண்ட் செய்துள்ளனர்.

கடந்த தேர்தலின்போதே சினிமா பிரபலங்களை வைத்து வாக்களிப்பதன் அவசியத்தை தேர்தல் ஆணையம் எடுத்துரைத்ததை மறந்திருக்க முடியாது.

அந்த வரிசையில், தற்போது தலைமை தேர்தல் அதிகாரியின் ட்விட்டரில் எத்தகைய புரோமோஷன் இடம் பெற்றிருக்கிறது என்பதை உணர்த்த உங்களுக்காக சில பகிர்வுகள்:

1. கண்ணா நீ எங்க எப்படி ஓட்டுப்போடுவன்னு தெரியாது. ஆனா ஓட்டு போடுரு நேரத்துல வாக்காளர் பட்டியல்ல பேரு கரெக்டா இருக்கணும் (இது யார் ஸ்டைல் என்று உங்களுக்கு சொல்லத் தேவையில்லைதானே)

2. உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளதா என்று செக் செய்யவும் - இதற்கான டீஸர் 'நடுவுல கொஞ்சம் பேர காணோம்'

3. 18 வயதினிலே உங்களுக்கு என்ன பண்ணனும்னு தெரியும் (இது 36 வயதினிலே பட ஸ்டில் ஸ்டைல்)

சினிமா வசனங்கள், போஸ்டர்களை மட்டுமே பயன்படுத்தவில்லை. நம் இளைஞர்கள் எவற்றிற்கு எல்லாம் டார்கெட் குரூப்பாக இருந்திருப்பார்கள் என்பதை நன்கு கணித்து சில விஷயங்களை செய்துள்ளனர்.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால், "உங்கள் குழந்தை பருவத்தின் முதல் சூப்பர் ஹீரோ சக்திமானா? அப்படியானால் நீங்கள் வாக்களிக்கும் வயதை எட்டிவிட்டீர்கள்" என்கிறது ஒரு ட்வீட். அதற்கு சக்திமான் படம் வேறு வைத்து கூடுதல் கவன ஈர்ப்பு செய்துள்ளனர். பக்ஸ் பன்னி கார்ட்டூனையும் விட்டுவைக்காமல் தொட்டுச் சென்றிருக்கின்றனர்.

பஸ்ஸில் பத்து நிமிடம் பயணத்தில்கூட ஃபோனில் வீடியோ கேம் விளையாடும் இளைஞர்களை கவனத்தை பெற வாக்குப்பதிவு இயந்திரத்தின் படத்தை போட்டு இந்த கேமை விளையாடியிருக்கிறீர்களா என சிந்தையை தூண்டுகின்றனர்.

ஆம், நம்மில் பரும் தேர்தல் கூட்டணி கணக்குகளை எண் விளையாட்டு (நம்பர் கேம்) என்றுதானே காலங்காலமாக சொல்லி வருகிறோம்.

அப்படியெனில் இளைஞர்களை விளையாட வாருங்கள் என்றழைப்பது சரிதானே எனத் தோன்றுகிறது.

சதா ஆன்லைனில் இருக்கும் இளைஞர்களுக்காகா, கெட் ஆன்லைன்; கெட் என்ரோல்டு போன்ற டேக் லைன்களும் இருக்கின்றன.

துண்டு பிரசுரங்கள் காலம் மலையேறிவிட்டது, டிவி பிரச்சாரங்கள் சேனல் மாற்றும்போது மின்னல் வேகத்தில் மங்கி விடுகிறது, எனவே காலத்துக்கு ஏற்றாற் போன்ற வயது வரம்பின்றி அனைவரையும் கட்டுக்குள் வைத்திருக்கும் சமூக வலைதளங்களில் இத்தகைய விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்படுவது வரவேற்க்கத்தக்கதே.

வாக்களிப்பது தொடர்பாக இன்னும் பல சுவாரஸ்ய ட்வீட்களும் இருக்கின்றன. அத்தனையும் பார்க்க > twitter.com/TNelectionsCEO என்ற பக்கத்துக்குச் செல்லவும். பார்த்து ரசிப்பதற்கு மட்டுமல்ல; சிந்தித்து செயல்படவும் சிறப்பான பகிர்வுகள் இருக்கின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x