Published : 26 Jul 2021 10:00 PM
Last Updated : 26 Jul 2021 10:00 PM
இந்தியாவின் சிறந்த மின் நிறுவனங்கள் பட்டியலில் தமிழக மின்வாரியம் 39-வது இடம் பிடித்துள்ளது. தமிழக மின்வாரியம் கடைசி நிலையான சி நிலையில் இடம் பெற்றுள்ளது.
இதை எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொண்டு மின்வாரியம் செயல்பட வேண்டும் என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்த தர்மலிங்கம், உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்த மனு:
நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்கு தமிழக உயர் அழுத்த மின் கம்பிகள் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த உயர் அழுத்த மின் கம்பிகள் விவசாய நிலங்கள் வழியாக கொண்டுச் செல்லப்படுகிறது. இதனால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும்.
எனவே, நாங்குநேரி சிறப்பு பொருளாதார மண்டலத்திற்கு உயர் அழுத்த மின் கம்பிகள் கொண்டுச்செல்லும் பாதை தொடர்பாக 17.12.2020-ல் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து, மாற்று பாதையில் உயர் அழுத்த மின் கம்பியை கொண்டுச் செல்ல உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனுவை விசாரித்து நீதிபதி ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு:
நாங்குநேரி சிறப்புப் பொருளாதார மண்டலம் தொழிற்சாலைகள் அமைப்பதற்கும், தொழில் முதலீடுகளை ஈர்பதற்குமான ஒரு சிறப்பு திட்டமாகும். தமிழக மின் வாரியமும், தமிழக தொழில் துறையும் இணைந்து செயல்பட்டால் தான் மனுவில் கூறப்பட்டுள்ளது போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும்.
பல்வேறு துறைகளின் ஒருங்கிணைப்பு, ஒத்துழைப்பு இல்லாமல் தொழில்துறை வளர்ச்சி என்பது இருக்காது. மத்திய எரிசக்தி துறை அறிக்கையில் 41 மின் நிறுவனங்கள் பட்டியலில் தமிழக மின்வாரியம் 39-வது இடத்தில் உள்ளது. தமிழக மின்வாரியம் கடைசி நிலையான சி நிலையில் இடம் பெற்றுள்ளது. இந்த அறிக்கையை மின்வாரியம் எச்சரிக்கை மணியாக எடுத்துக்கொள்ள வேண்டும்.
எனவே, தமிழக மின்வாரியம் மோசமான நிலையிலிருந்து மேம்பட சில தீர்க்கமான முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. எனவே மனுதாரர் கோரிக்கை தொடர்பாக எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுதாரர் மின்வாரியம் மற்றும் தொழில்துறையை அணுகி உரிய நிவாரணம் பெறலாம். மனு முடிக்கப்படுகிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT