Published : 26 Jul 2021 07:13 PM
Last Updated : 26 Jul 2021 07:13 PM
தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதித்து தமிழக அரசு கொண்டு வந்த சட்டத்தை எதிர்த்து தொடரபட்ட வழக்குகளின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஆகஸ்ட் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளது.
ஆன் லைன் ரம்மி, போக்கர் போன்ற சூதாட்ட விளையாட்டுகளுக்கு தடை விதித்து 2020 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் தேதி தமிழக அரசு சட்டம் இயற்றியது. இந்த சட்டத்தை ரத்து செய்யக்கோரி ஜங்லி கேம்ஸ், ப்ளே கேம்ஸ், ரீட் டிஜிட்டல் ஆகிய நிறுவனங்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
இந்த வழக்குகள் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனுசிங்வி, ஏ.கே. கங்குலி, ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன் ஆகியோர் வைத்த வாதத்தில், “கடந்த 5 ஆண்டுகளில் ஆன்லைன் விளையாட்டிற்கு அடிமையாகி சில மரணங்கள் நிகழ்ந்ததால் இந்த விளையாட்டிற்கு தடை விதித்ததாக தமிழக அரசு சார்பில் தெரிவிக்கபட்டது.
ஆனால், ஜல்லிகட்டு போட்டியின் போது ஒவ்வொரு ஆண்டும் 20 பேர் வரை பலியாகின்றனர். உச்ச நீதிமன்றம் ஜல்லி கட்டிற்கு தடை விதித்தும், மாநில அரசு சட்டம் இயற்றி ஜல்லிக்கட்டை தொடர்ந்து நடத்தி வருகிறது.
ஜல்லிக்கட்டுக்கு அனுமதியளிக்கும் அரசு, ஆன்லைன் விளையாட்டிற்கு மட்டும் தடை விதித்து சட்டம் இயற்றி உள்ளது. இது திறமைகளுக்கான விளையாட்டு, சூதாட்டம் இல்லை.
மேலும், எந்தவொரு காரணங்களும் இல்லாமல் இந்த தடை விதிக்கபட்டுள்ளது” எனத் தெரிவித்தனர்.
தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், “இந்த விளையாட்டால் நிறைய பேர் ஏமாந்து போயுள்ளனர். பொது நலனை கருத்தில் கொண்டு இந்த சட்டம் இயற்றப்பட்டது, இந்த சட்டத்தை இயற்ற அரசுக்கு அதிகாரம் இருக்கிறது” எனத் தெரிவித்தார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்ததை அடுத்து, தலைமை நீதிபதி அமர்வு, இந்த வழக்குகளின் தீர்ப்பை ஆக்ஸ்ட் 3 ஆம் தேதிக்கு தள்ளி வைத்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT