Published : 26 Jul 2021 04:01 PM
Last Updated : 26 Jul 2021 04:01 PM

ஓசூர் வனக்கோட்டத்தில் அடர் வனத்தை உருவாக்க 50 ஆயிரம் விதைப்பந்துகள் தூவல்

ஓசூர் வனக்கோட்டம் அஞ்செட்டி வனச்சரகத்தில் விதைப்பந்துகளை தூவும் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வலர்களுடன் மாவட்ட வன அலுவலர் பிரபு மற்றும் மாவட்ட வனப் பாதுகாவலர் கார்த்திகாயினி, வனச்சரகர் சீதாராமன் மற்றும் பலர் 

ஓசூர்

ஓசூர் வனக்கோட்டம் அஞ்செட்டி வனச்சரகத்தில் அடர்ந்த காடுகளை உருவாக்கும் விதமாக 50 ஆயிரம் விதைப்பந்துகளைத் தூவும் பணி இன்று நடைபெற்றது. இதுவரை 3 லட்சம் விதைப்பந்துகளைத் தூவும் பணி நிறைவு பெற்றுள்ளதாகவும், இதர வனச்சரகங்களிலும் விதைப்பந்துகளைத் தூவும் பணியைத் தொடர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மாவட்ட வன அலுவலர் பிரபு தெரிவித்துள்ளார்.

'ஓசூர் வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை' சார்பில் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு, இடைநிற்றல் மாணவ, மாணவிகளைக் கண்டறிந்து மீண்டும் பள்ளியில் சேர்த்தல், அரசுப்பள்ளி வளாகங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து பசுமையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவது, வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான விதைப்பந்துகளை வீசி அடர்ந்த காடுகளை உருவாக்க முயற்சி எடுப்பது உள்ளிட்ட பல்வேறு சமூக நலப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. அதன் தொடர்ச்சியாக அஞ்செட்டி வனச்சரகத்தில் அடர்ந்த காடுகளை உருவாக்கும் விதமாக மாவட்ட வனத்துறை அனுமதியுடன் 50 ஆயிரம் விதைப்பந்துகளை வீசும் பணி நடைபெற்றது.

மாவட்ட வனத்துறையின் வாயிலாக அஞ்செட்டி வனப்பகுதியில் சேகரிக்கப்பட்ட பூவரசு, அத்தி, மலைவேம்பு, இலுப்பை, புங்கன், துரிஞ்சி, மருது, வேம்பு, ஆலம், நாவல், கடம்பு உள்ளிட்ட பல்வேறு மரங்களின் விதையை இயற்கை உரக்கலவையுடன் கலந்து தயாரிக்கப்பட்ட 50 ஆயிரம் விதைப்பந்துகளை அடர்த்தி குறைந்த வனப்பகுதியில் வீசப்பட்டது. இப்பணியில் மாவட்ட வன அலுவலர் பிரபு தலைமையில் மாவட்ட வனப் பாதுகாவலர் கார்த்திகாயினி, அஞ்செட்டி வனச்சரகர் சீதாராமன் மற்றும் வனப்பணியாளர்கள் பங்கேற்றனர். இவர்களுடன் 'ஓசூர் வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை' நிர்வாகிகள் இணைந்து விதைப்பந்துகளை வனப்பகுதியில் வீசும் பணியில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து மாவட்ட வன அலுவலர் பிரபு கூறும்போது, ''ஓசூர் வனக்கோட்டத்தில் 40 சதவீத அளவுக்கு அடர்த்தி குறைவாக உள்ள வனப்பகுதிகளில் விதைப்பந்துகளைத் தூவி அடர்த்தி மிகுந்த காடுகளை உருவாக்கும் பணி, தொண்டு அமைப்புகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் தொடரும் இப்பணியில் இன்று தூவப்பட்டுள்ள 50 ஆயிரம் விதைப்பந்துகளையும் சேர்த்து இதுவரை மொத்தம் 3 லட்சம் விதைப்பந்துகள் தூவப்பட்டுள்ளன. தற்போது ஓசூரில் இயங்கி வரும் 'வித் யூ கல்வி மற்றும் சமூக அறக்கட்டளை' மூலமாக 50 ஆயிரம் விதைப்பந்துகள் தூவப்பட்டுள்ளன. இந்த விதைப்பந்துகள் குறைந்த செலவில் குறுகிய காலத்தில் களிமண், மாட்டுச் சாணம், மட்கிய உரம் உள்ளிட்ட இயற்கை உரம் கலந்த கலவையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்குத் தேவையான வில்வம், வேம்பு, புங்கன், பூவரசு, ஆலம், தேக்கு, சந்தனம் உள்ளிட்ட பல்வேறு மரங்களின் விதைகள், வனத்துறை சார்பில் சேகரித்து வழங்கப்பட்டன. இந்த விதைப்பந்துகளைப் பள்ளி மாணவர்கள் உட்பட 50 தன்னார்வலர்கள் இணைந்து தயாரித்துள்ளனர். இந்த 50 ஆயிரம் விதைப்பந்துகளும் அஞ்செட்டி வனச்சரகத்தில் உள்ள பிலிகுண்டலு காப்புக்காடு பகுதியில் தூவப்பட்டுள்ளன. வனத்தில் தூவப்பட்ட 50 ஆயிரம் விதைப்பந்துகளில் சுமார் 40 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை பலன் கிடைக்க வாய்ப்புள்ளது. இதுபோன்று ஓசூர் மக்கள் சங்கம் உள்ளிட்ட தொண்டு அமைப்புகளுடன் இணைந்து மற்ற வனச்சரகங்களிலும் விதைப்பந்துகளைத் தூவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்று தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x