Last Updated : 26 Jul, 2021 03:14 AM

 

Published : 26 Jul 2021 03:14 AM
Last Updated : 26 Jul 2021 03:14 AM

செல்போன் செயலி மூலம் செய்யப்படும் பணப் பரிவர்த்தனையில் காத்திருக்கும் ஆபத்து: அலட்சியம், கவனக்குறைவு வேண்டாம் என போலீஸார் எச்சரிக்கை

கோப்புப்படம்

திருச்சி

'போன் பே' செயலியை பயன் படுத்தியபோது, ஐ.டி நிறுவன பணியாளரின் பணத்தை அடையா ளம் தெரியாத நபர்கள் நூதன முறையில் மோசடி செய்து எடுத்துள்ளனர். எனவே, டிஜிட்டல் பண பரிவர்த்தனையின்போது அலட்சியம், கவனக்குறைவாக இருக்க வேண்டாம் என பொதுமக்களுக்கு சைபர் கிரைம் போலீஸார் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் ‘இந்து தமிழ்' நாளித ழிடம் கூறியது:

திருச்சி மண்ணச்சநல்லூரைச் சேர்ந்த ஐ.டி நிறுவன பணியாளரான மோகன் தனது ‘போன் பே' செயலியில் இருந்து, குறிப்பிட்ட அளவு பணத்தை தனது வங்கிக் கணக்குக்கு மாற்ற முயன்றுள்ளார். அப்போது, பண பரிமாற்றம் செய்ய முடியாமல் போனதால், அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு மையத்தை தொடர்பு கொண்டு புகார் கூறியுள்ளார். அதன் பின்னர், உடனடியாக அந்நிறுவனத்தின் வாடிக்கையாளர் தொடர்பு மையத்திலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு ஒருவர் பேசியுள்ளார்.

அப்போது அந்த நபர், ‘போன் பே'யின் ஹெல்ப் பகுதிக்குச் சென்று வங்கி கணக்கு குறித்த விவரங்களை பதிவு செய்யுமாறு கூறியதன்பேரில், மோகன் தனது அனைத்து விவரங்களையும் அதில் குறிப்பிட்டுள்ளார். மேலும், அப்போது தனக்கு வரப்பெற்ற ஓடிபி எண்ணையும் அந்த நபரிடம் பகிர்ந்து கொண்டுள்ளார். அதன் பின் மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் ‘போன் பே' பிசினஸ் அப்ளிகேஷனை இன்ஸ்டால் செய்யச் சொல்லியுள்ளார்.

மோகன் அதைச் செய்த சில நிமிடங்களில், அவரது வாலட்டில் இருந்த அனைத்து பணமும் 4 தவணைகளாக வேறொரு கணக்குக்கு மாற்றப்பட்டுவிட்டது. இதனால், அதிர்ச்சியடைந்த மோகன், இதுகுறித்து ‘போன் பே' வாடிக்கையாளர் மையத்தில் மீண்டும் புகார் அளித்தும் பலன் கிடைக்கவில்லை.

எனவே, தற்போது சைபர் கிரைம் பிரிவில் புகார் கொடுத்துள் ளார். 'போன் பே' வாடிக்கையாளர் மையத்தில் அவர் அளித்த தகவல்கள், எப்படி மோசடி நபர் களுக்குச் சென்றது எனத் தெரிய வில்லை. இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

ரகசிய விவரங்களை பகிர வேண்டாம்

இதுகுறித்து சைபர் கிரைம் போலீஸார் மேலும் கூறும்போது, “செல்போன் செயலிகள் மற்றும் டிஜிட்டல் மூலம் பண பரிவர்த் தனைகள் செய்வது மிகவும் எளிமையானதாக இருக்கின்றது.

எனினும், அதில் பல்வேறு ஆபத்துகளும் இருக்கின்றன. எந்த ஒரு சூழலிலும் வங்கி மேலாளர் என்றோ, வாடிக்கையாளர் மைய பிரதிநிதி என்றோ அல்லது வேறு ஏதேனும் ஒரு காரணத்தை கூறியோ தங்களது வங்கி விவரங்களை யார் கேட்டாலும், பொதுமக்கள் அவற்றை பகிர வேண்டாம். குறிப் பாக ஓடிபி, பாஸ்வேர்டு, ஏடிஎம் கார்டு நம்பர், எம்.பின் நம்பர், சி.வி.வி நம்பர் போன்றவற்றில் மிக கவனமாக இருக்க வேண்டும்.

இதில் அலட்சியம், கவனக் குறைவாக இருந்தால் ஏமாற்றுக் காரர்களிடம் நமது பணத்தை இழக்க நேரிடலாம். எனவே, முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது’' என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x