Published : 25 Jul 2021 05:58 PM
Last Updated : 25 Jul 2021 05:58 PM

தமிழகத்தில் தொன்மையான இடங்களைப் பராமரிக்க ஆணையம்: சுற்றுலா துறை முதன்மைச் செயலர் தகவல்

மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் இன்று தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.  

மதுரை

தமிழகத்தில் பழமையான இடங்களைப் பராமரிப்பது தொடர்பாக தொல்லியல் ஆணையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது, விரைவில் அதற்கான அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது என தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை முதன்மைச் செயலாளர் பி.சந்திரமோகன் இன்று மதுரையில் தெரிவித்தார்.

மதுரை திருமலை நாயக்கர் அரண்மனையில், இன்று தமிழக அரசின் சுற்றுலா, பண்பாடு மற்றும் சமய அறநிலையத்துறை முதன்மை செயலாளர் பி.சந்திரமோகன் ஆய்வு செய்தார். அப்போது மாவட்ட ஆட்சியர் எஸ்.அனீஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கா.ப.கார்த்திகேயன் ஆகியோர் உடனிருந்தனர்.

பின்னர் பி.சந்திரமோகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதுரையில் திருமலை நாயக்கர் மஹாலில் ரூ.8.27 கோடியில் புனரமைப்பு பணிகள் செயல்படுத்த திட்டமிட்டிருக்கிறோம். மேலும் ரூ.1.7 கோடியில் ஒளி ஒலி காட்சிக்கு ஏற்ற வகையில் புதிய விளக்குகள் அமைக்கப்படவுள்ளன. அதற்கான ஒப்பந்தப் பணிகளுக்கான அரசாணை கடந்த ஜனவரி மாதம் வெளியிடப்பட்டுள்ளது, தேர்தல் மற்றும் கோவிட் காலம் என்பதால் தாமதமானது, தற்போது விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தொல்லியல் எச்சங்களை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு ஒவ்வொருக்கும் வர வேண்டும். அதற்கு தேவையான முயற்சிகளை நாங்கள் எடுப்போம்.

கீழடி அருங்காட்சியகம் அமைக்கும் பணி கரோனாவால் தாமதமானது, தற்போது வேகமாக நடந்து வருகின்றன. தமிழகத்தில் பழமையான இடங்களைப் பராமரிப்பது குறித்து தொல்லியல் ஆணையம் அமைப்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது விரைவில் அதற்கான அறிவிப்புகள் வர வாய்ப்புள்ளது.

மீனாட்சி அம்மன் கோயில் வீரவசந்தராயர் மண்டபம் புனரமைப்பு பணிக்கு தற்போதுதான் கற்கள் வந்துள்ளது. ஸ்தபதி குழு மூலம் சிற்பங்கள், சிலைகள் செதுக்கும் பணி முடிய மூன்று ஆண்டுகள் ஆகும். அதற்கு பின்னர்தான் மீனாட்சி அம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும், என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x