Published : 25 Jul 2021 05:48 PM
Last Updated : 25 Jul 2021 05:48 PM
இனிவரும் நாட்களில் கரோனா தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசிக்கான டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும் என, கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் தெரிவித்துள்ளார்.
பொதுமக்கள் நள்ளிரவு, அதிகாலை முதல் தடுப்பூசி மையங்கள் முன்பு காத்திருப்பதைத் தவிர்ப்பதற்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் மாற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு, தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன் இன்று (ஜூலை 25) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
"வட்டார அளவில் சேமித்து வைக்கப்படும் கரோனா தடுப்பூசிகள் தினமும் எந்தெந்த பஞ்சாயத்துக்களில் செலுத்தப்படும் என்ற விவரம், செலுத்தப்படும் தடுப்பூசிகளின் எண்ணிக்கை விவரம் ஆகியவை தினமும் காலை 8 மணிக்கு மாவட்ட நிர்வாகத்தின் https://coimbatore.nic.in/ என்ற இணையதளம், https://twitter.com/collectorcbe ட்விட்டர் பக்கம், https://www.facebook.com/CollectorCoimbatore முகநூல் பக்கத்தில் அறிவிக்கப்படும்.
மேலும், கரோனா தடுப்பூசி மையங்களில் காலை 9 மணி முதல் தடுப்பூசி டோக்கன்கள் விநியோகம் செய்யப்படும். டோக்கன் பெற்றவர்களுக்கு காலை 10 மணி முதல் தடுப்பூசி செலுத்தப்படும். அந்தந்த பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
தடுப்பூசி மையங்களைக் கண்காணிக்கும் வகையில், வருவாய்துறை, உள்ளாட்சித்துறை, காவல்துறையினர் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
கரோனா தடுப்பூசி மையங்களில் உள்ள குறைகள், புகார்கள் ஏதேனும் இருப்பின் மாவட்ட கரோனா கட்டுப்பாட்டு அறையின் 1077 என்ற இலவச எண்ணில் தொடர்புகொண்டு பொதுமக்கள் தெரிவிக்கலாம்".
இவ்வாறு ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT