Published : 25 Jul 2021 02:15 PM
Last Updated : 25 Jul 2021 02:15 PM

கரோனா நிவாரணத் தொகை பெறாதோர் வரும் 31-ம் தேதிக்குள் பெறலாம்; புதிய அட்டைதாரர்களுக்கு ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து பொருட்கள் விநியோகம்: தமிழக அரசு அறிவிப்பு

பிரதிநிதித்துவப் படம்

சென்னை

கரோனா நிவாரண தொகை ரூ.4,000-ஐ இதுவரை பெறாதோர் வரும் 31-ம் தேதிக்குள் பெற்றுக்கொள்ள தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக, தமிழக அரசு இன்று (ஜூலை 25) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

" 1) கரோனா பெருந்தொற்றுக் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில், மே 15, 2021 முதல், முதல் தவணையாக ரூ.2,000 மற்றும் ஜுன் 15, 2021 முதல் ரூ.2,000 ஆக மொத்தம் ரூ.4,000 உதவித்தொகை, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்குத் தொடர்ந்து விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. மேலும், இக்குடும்பங்களுக்கு முழு ஊரடங்கின்போது தேவைப்படும் மளிகைப் பொருட்கள் வழங்கிடும் பொருட்டு, 14 மளிகைப் பொருட்கள் அடங்கிய தொகுப்புப் பையினை ஜுன் 15 ஆம் தேதி முதல் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக் கடைகள் வாயிலாக வழங்கப்பட்டு வருகிறது.

2) 99 சதவீதத்துக்கும் மேலாக அட்டைதாரர்கள் தற்பொழுது நிவாரணத்தொகை மற்றும் மளிகைப் பொருட்கள் தொகுப்பினைப் பெற்றுள்ள நிலையில், இதுவரை பெறாதோர் 31.07.2021-க்குள் அவர்களுக்குரிய பொது விநியோகத்திட்ட அங்காடிகளில் பெற்றுக்கொள்ளக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். கரோனா பாதிப்பு மற்றும் இதர காரணங்களால் 31.07.2021-க்குள் பெற இயலாத, 15.06.2021 அன்றைய தேதியில் தகுதியுடன் இருந்த, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 01.08.2021 முதல் மாவட்ட வழங்கல் அலுவலர் நிலையிலான அலுவலரிடம் நியாயவிலைக் கடை மூலமாகத் தகவல் தெரிவித்து அனுமதிபெற்று அதன்பின் அவர்களுக்கு உரிய நியாயவிலைக் கடையிலிருந்தே வழங்கும் முறை பின்பற்றப்படும்.

3) நிகழும் 2021 ஆம் ஆண்டு மே 10 முதல் புதிய குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்த சற்றேறக்குறைய மூன்று லட்சம் மனுதாரர்களுக்குக் குடும்ப அட்டைகள் அச்சிட்டு வழங்கப்பட்டு வருகின்றன. இக்குடும்ப அட்டைதாரர்கள் 01.08.2021 முதல் இவர்களுக்கு ஒதுக்கப்பட்ட கடைகளில் ரேசன் பொருட்களைத் தொடர்ந்து பெற வழிவகை செய்யத் தேவையான தொழில்நுட்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆதலால், புதிய குடும்ப அட்டைதாரர்கள் 2021 ஆகஸ்ட் முதல் வாரத்திலிருந்து இன்றியமையாப் பொருட்களைத் தங்குதடையின்றிப் பெற்றுக்கொள்ளலாம்.

4) அட்டைதாரர்கள் அனைவரும் கரோனா நோய்த் தொற்று தீரும் வரை முகக்கவசம் அணிந்து, தனிமனித இடைவெளியினைப் பின்பற்றி, அவசியத் தேவையின்றிப் பொது வெளிக்கு வராமல் தங்களையும் காத்து சமூகத்தினையும் காத்து கரோனா தொற்றினை வென்றிடுவோம்".

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x