Published : 25 Jul 2021 11:33 AM
Last Updated : 25 Jul 2021 11:33 AM
ராமதாஸின் 83-வது பிறந்த நாளையொட்டி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர், அவருக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்தினர்.
இது தொடர்பாக, பாமக தலைமை அலுவலகம் இன்று (ஜூலை 25) வெளியிட்ட செய்திக்குறிப்பு:
"பாமகவின் நிறுவனர் ராமதாஸின் 83-வது பிறந்தநாளையொட்டி, இன்று காலை அவரை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். ராமதாஸின் உடல் நலம் குறித்து விசாரித்த பிரதமர், டெல்லிக்கு வரும்படியும் அழைப்பு விடுத்தார்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் இன்று காலை ராமதாஸை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு 83-வது பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினும் ராமதாஸை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார். அதை ஏற்றுக் கொண்ட ராமதாஸ், 'உங்கள் தந்தை கருணாநிதி என்னுடன் மிகவும் நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். ராமதாஸை விட்டால் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலனுக்காக போராட வேறு யாரும் இல்லை என்று அனைவரிடமும் கூறுவார். பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் நலன்களுக்காக பல திட்டங்களை அவர் செயல்படுத்தினார். உங்கள் தந்தையின் அந்த இடத்தை நீங்கள் பிடிக்க வேண்டும்" என்று வாழ்த்தினார். அதற்காக ராமதாஸுக்கு முதல்வர் நன்றி தெரிவித்துக் கொண்டார்.
பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் ராமதாஸ் நன்றி தெரிவித்துக் கொண்டார்".
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT