Published : 28 Feb 2016 01:20 PM
Last Updated : 28 Feb 2016 01:20 PM
திருச்சியில் ஆண்டுக்கணக்கில் முடங்கிக் கிடந்த அரைவட்ட சுற்றுச்சாலை பணிகள் மீண்டும் தொடங்கியுள்ளன. முதற்கட்டமாக ஓலையூரிலிருந்து பஞ்சப்பூர் வரையிலான பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
திருச்சி மாநகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக திருச்சி-தஞ்சை (அசூர்), திருச்சி-புதுகை (மாத்தூர்), திருச்சி-மதுரை (பஞ்சப்பூர்), திருச்சி-திண்டுக்கல் (சோழன்நகர்), திருச்சி-கரூர் (திண்டுக்கரை) ஆகிய 5 தேசிய நெடுஞ்சாலைகளை இணைக்கும் வகையில் அரைவட்ட சுற்றுச்சாலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி கடந்த 2006-ம் ஆண்டு தொடங்கி படிப்படியாக மேற்கொள்ளப்பட்டது.
அதைத்தொடர்ந்து துவாக்குடி அருகேயுள்ள அசூரிலிருந்து மாத்தூர், ஓலையூர் வழியாக பஞ்சப்பூர் வரையிலான 26 கிலோமீட்டர் தூரத்தை ஒரு பகுதியாகவும், பஞ்சப்பூரிலிருந்து கொத்தமங்கலம், சோழன் நகர், ஜீயபுரம் வழியாக திண்டுக்கரை வரையிலான 17 கிலோமீட்டர் தூரத்தை மற்றொரு பகுதியாகவும் பிரித்து, சுற்றுச்சாலைகள் அமைக்கும் பணிகள் தொடங்கின.
ஆனால் கே.சாத்தனூர், கணக்கன்குளம், கள்ளிக்குடி, கொத்தமங்கலம் உட்பட 11 இடங்களில் ஏரி, குளங்களுக்கு நடுவே இந்த சாலையை அமைக்க திட்டமிட்டிருந்ததால், இதற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். பல்வேறு கட்ட போராட்டங்களும் நடத்தப்பட்டன. மேலும், விவசாயிகள் உயர்நீதிமன்றத்துக்குச் சென்றதால் சுற்றுச்சாலை அமைக்கும் பணிகள் பாதியில் நிறுத்தப்பட்டன.
அதன்பின் மாவட்ட நிர்வாகம், விவசாயிகளுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளில் சுமுக உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் சுற்றுச்சாலை திட்டம் ஆண்டுக்கணக்கில் முடங்கியது. விடுபட்ட பணிகளை மீண்டும் தொடங்க வேண்டும் என பல்வேறு கட்சிகள், அமைப்புகள் அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தன. மேலும், சுற்றுச்சாலை அமைப்பதற்கு மதுரை உயர் நீதிமன்ற கிளை விதித்திருந்த தடை உத்தரவும் அண்மையில் விலக்கிக் கொள்ளப்பட்டது.
இதையடுத்து, ஓலையூரிலிருந்து பஞ்சப்பூர் வரையிலான சுற்றுச்சாலை பணிகள் நேற்று முதல் மீண்டும் தொடங்கியுள்ளது. சாலை அமைய உள்ள நிலங்களை சமதளமாக மாற்றுவது, இருபுறமும் நில அளவை செய்து எல்லைக்கல் ஊன்றுவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையினர் கூறும்போது, “விவசாயிகளின் எதிர்ப்பு, நிலம் கையகப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதத்தால் இப்பணிகளில் தாமதம் ஏற்பட்டிருந்தது. நீர்நிலைகளுக்கும், விவசாயிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் சாலை அமைப்பது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் ஆய்வு நடத்தி சில பரிந்துரைகளை அளித்துள்ளது. அதனடிப்படையில், சுற்றுச்சாலையின் பழைய திட்டத்தில் சில மாற்றங்களை செய்து, மீண்டும் சாலைகள் அமைக்கும் பணி தொடங்கப்பட்டுள்ளன” என்றனர்.
அதேசமயம், பஞ்சப்பூரிலிருந்து சோழன்நகர் வழியாக ஜீயபுரம் அருகேயுள்ள திண்டுக்கரை வரையிலான சுற்றுச்சாலை பணிகளை மீண்டும் தொடங்குவது குறித்து தேசிய நெடுஞ்சாலைத் துறையிடமிருந்து இதுவரை எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT